ஆரோக்கிய உணவு

சூப்பர் சத்து… சிறுதானியப் பால்!

முளைதானியப் பால்… அருமையான, ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், இரத்தின சக்திவேல்!
சென்னையைச் சேர்ந்த ‘இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல், ”சிறுதானியங்களில் இருந்து பால் எடுக்க முடியும். அவற்றை நீரில் ஊறவைத்து, முளைதானியங்கள் ஆக்கும்போது, அவை அருமையான இயற்கைத் தாவர உணவுகள் ஆகின்றன. அதனுடன் தண்ணீர் விட்டு அரைத்துப் பாலாக்கி அப்படியே குடித்தால், அது தாவரப்பால்; சூடு செய்து குடித்தால், அது சைவப்பால்!” என்று நற்செய்தி சொல்கிறார்.
சிறுதானியங்களில் இருந்து எப்படி பால் தயாரிப்பது என்பதைச் சொல்லிக் கொடுத்த இரத்தின சக்திவேல், அது நம் உடலுக்குத் தரும் நன்மைகள் என்னென்ன என்பதையும் பகிர்ந்தார்.
p64a
”முளைதானியப் பால் எடுக்க, பயன் படுத்தும் தண்ணீர் மற்றும் பருத்தித் துணி தூய்மையானதாகவும், தானியங்கள் முற்றிய விதைகளாகவும் இருக்க வேண்டும். ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கான தானியம் 50-100 கிராம். தானியத்தை முதலில் எட்டு மணி நேரம் குடிநீரில் ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் ஊற நேரம் எடுக்கும் தானியம் எனில், புது நீர் மாற்ற வேண்டும். பின், ஊறவைத்த தானியத்தை, இரண்டு முறை குடிநீரில் கழுவ வேண்டும். அதை ஈரமான பருத்தித் துணியில் கட்டி தொங்கவிட்டு, காற்றில் 8 மணி நேரம் முளைவிட வைக்க வேண்டும். பொதுவாக, காலையில் தானியத்தை ஊறவைத்து, மாலையில் நீரை வடித்துக் கழுவி, பருத்தித் துணியில் கட்டினால், மறுநாள் காலை அழகழகாக முளை எட்டிப் பார்க்கும் (பருவ நிலை மாற்றத்தால், ஊறும் மற்றும் முளைக்கும் நேரங்கள் மாறுபடலாம்).

இந்த முளைதானியத்துடன் 150 மில்லி நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடித்தால், முளைதானியப் பால் தயார். இம்முறையில் பச்சைப்பயறு, கோதுமை, நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதை, கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கொள்ளு, கம்பு ஆகிய தானியங்களிலிருந்து பால் எடுத்துப் பருகலாம்!” என்று விளக்கிய இரத்தின சக்திவேல், வெவ்வேறு தானியங்களை முளைகட்ட வைக்கும் முறை, முளைதானியப் பாலை எதனுடன் சாப்பிடுவது மற்றும் தானியங்கள் தரவல்ல பலன்கள் என விரிவாக பேசினார்…

”பச்சைப்பயறு பாலுடன் தேன்/வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். ஓரிரு பேரீச்சை, தேங்காய்த் துண்டுகள், வறுக்காத முந்திரி, உலர் திராட்சை இணைத்து இந்தப் பாலை காலை உணவுக்குப் பதில் குடிக்கலாம். சர்க்கரை வியாதி அன்பர்கள் காய்கறிகள் இணைத்துச் சாப்பிடலாம்.
கோதுமையில் சம்பா கோதுமை, பஞ்சாப் கோதுமை என்று இரு வகை உண்டு. இதில் பஞ்சாப் கோதுமையே முளைகட்ட ஏற்றது. கோதுமையை 8 முதல் 12 மணி நேரம் நீரில் ஊறவைப்பதுடன், அது முளைக்கவும் 12 முதல் 18 மணி நேரமாகும். கோதுமைப்பாலுடன் சுவைக்கு தேன்/வெல்லம் அல்லது மிளகுத்தூள் சேர்க்கலாம். நீரில் ஊறிய கோதுமைகளை மண்ணில் புதைத்து நீர் ஊற்றி வந்தால், ஐந்தாறு தினங்களில் பச்சை பசேல் கோதுமைப் புல் வளர ஆரம்பிக்கும். வளர வளர வெட்டி, ஒரு கைப்பிடிக்கு ஒரு டம்ளர் நீர் சேர்த்து அரைத்து அத்துடன் தேன், வெல்லம், மிளகுத்தூள் சேர்த்துப் பானமாகச் சாப்பிடலாம். பெண்களைத் தாக்கும்

மார்பக‌ புற்றுநோயை மட்டுப்படுத்தும் இதை, அருமையான பச்சை ரத்தம் என்கின்றனர்.
நிலக்கடலையை 12 முதல் 15 மணி நேரம் ஊறவைப்பதுடன், இதற்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நல்ல தண்ணீர் மாற்றிவிட வேண்டும். 15 முதல் 18 மணி நேரத்தில் முளை கிளம்பி வரும். நிலக்கடலைப் பாலுடன் தேன் / வெல்லம் கலந்து பருகலாம்.
எள்ளைக் கழுவும்போது, மண் இல்லாமல் அரித்து அள்ளிக்கொள்ள வேண்டும். கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க வைத்துச் சாப்பிடலாம். நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஊற வைத்தோ, முளைக்க வைத்தோ சாப்பிடும்போது, எண்ணெய் உணவுகள் தேவையில்லை. எளிதில் ஜீரணமாகக்கூடிய கொலஸ்ட்ரால், ‘ஒமேகா 3’ ஆயில் தன்மை அதிக அளவிலும் கிடைக்கும். முளைத்த எள்ளுடன் வெல்லம், பேரீச்சை இணைத்துச் சாப்பிடலாம். விட்டமின் ‘டி’ மிகுந்துள்ள சூரியகாந்தி முளையை, கண்பார்வையை மேம்படுத்த விரும்பும் அன்பர்கள் அடிக்கடிப் பயன்படுத்தலாம்.
p64b
கொண்டக்கடலை முளைப்பால், கறுப்பு உளுந்து முளைப்பால், குளிர்ச்சி மிகுந்த உணவு என்பதுடன், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் அற்புத உணவு. உடல் போஷாக்கை வளர்க்கும். இதேபோல் கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், மூங்கில் அரிசி, சோயா, பார்லி, வெந்தயம் போன்றவற்றையும் முளைப்பாலாக்கிப் பருகலாம். எல்லாவற்றிலும் சுவையான முளைதானியம், கம்பும் வேர்க்கடலையும்தான்!” என்று இனிக்கச் சொன்ன சக்திவேல்,”பொதுவாக, சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை. அவற்றை ஊறவைக்கும்போது, சத்துக்களும் அதிகரிக்கும். மேலும் அவை முளைத்து தோல் வெடிக்கும்போது, அவற்றின் விட்டமின் மற்றும் தாது உப்பு சத்துகள் இன்னும் அதிக அளவில் பெருகிவிடுகின்றன. அசைவ உணவான சிக்கனைவிட அதிக சக்தி உள்ளவை என்பதுடன், பக்கவிளைவுகள் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவை இந்த சைவ தாவர உணவுகளும், முளைப்பால் வகைகளும், பயன்படுத்திக் கொண்டால், குடும்பத்தின் ஆயுள் அதிகரிக்கும்!” – ஆரோக்கிய வழிகாட்டி நிறைவுசெய்தார், இரத்தின சக்திவேல்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button