32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
ld4204
மருத்துவ குறிப்பு

அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்!

சுய பரிசோதனை

திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான் தன் துணை தான் விரும்பியபடி நடந்து கொள்ளாதபட்சத்தில் கோபப்படத் தோன்றும். தன் வாழ்க்கையில் எப்போதோ சந்தித்த நிகழ்வுகளின் தாக்கம், உறவுகளி ன் அணுகுமுறை போன்ற பல விஷயங்களும் ஆழ்மனத்தில் பதிந்து போய், அது இயக்கும்படிதான் நிகழ்காலத்தில் நடக்க வைக்கும்.

அந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்ப்பார்கள். மனைவி பேச்சைக் கேட்கிற கணவனை, ஊரும் உலகமும் வசை பாடும். பெரும்பாலான கணவர்கள் மனைவியை தனக்குச் சமமாக நடத்தியிருக்க மாட்டார்கள். எந்த விஷயத்துக்கும் மனைவியின் அபிப்ராயமும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறை தன்னுடைய குடும்பப் பின்னணியில் இருந்து, தன் பெற்றோரிடம் இருந்து, தன் வளர்ப்பிலிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

எப்போதும் கணவனிடமோ, மனைவியிடமோ எரிந்து விழுவதும், கோபமாகவே பேசுவதும் சிலருக்கு இயல்பிலேயே ஊறிப் போயிருக்கும். அவர்களது பெற்றோரைப் பார்த்து தெரிந்தோ தெரியாமலோ அதைத் தாமும் பின்பற்றுவார்கள். அப்படி இருக்கக்கூடாது என நினைத்தாலும் அவர்களால் முடியாது. சமைப்பதும் குழந்தையைக் கவனிப்பதும் மனைவியின் வேலை என்றே நினைப்பார்கள். இன்றும்கூட மனைவியின் சேலையை கணவன் துவைப்பதை தமிழ் சினிமாக்களில் காமெடி காட்சியாக வைப்பதைப் பார்க்கிறோம்.

இப்படிப் பல விஷயங்களையும் கணவனும் மனைவியும் அவர்களையும் அறியாமலேயே தங்கள் திருமண உறவுக்குள் சுமந்து கொண்டு வந்து விடுகிறார்கள். இவற்றில் உணர்வு ரீதியான சில விஷயங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என எல்லாம் அடக்கம். வீட்ல ஏதாவது பிரச்னைன்னா இவர் அமைதியா உட்கார்ந்து பேசி சுமுகமா ஒரு முடிவுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல சார். கன்னாபின்னானு திட்டிட்டு, கதவை ஓங்கி அடிச்சு சாத்திட்டுப் போயிடுவார்…’ – தன் கணவரைப் பற்றி என்னிடம் இப்படிச் சொன்னார் ஒரு பெண்.

பிரச்னை என்றால் உட்கார்ந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனத் தெரியாமல் கதவை அடித்துக் கொண்டு போவதுதான் தீர்வு என்பதை அந்தக் கணவர் அவர் வளர்ந்த சூழலில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். தான் வளர்ந்த சூழலில் இருந்து சில விஷயங்களை சுமந்து கொண்டு புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கிற ஆண்கள் அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். இந்தத் தலைமுறைப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். சம உரிமை கேட்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஆண்களுக்கு சாய்ஸ் குறைவாக இருக்கிறது. ஒன்று மனைவிக்கு ஏற்றபடி மாறியாக வேண்டும் அல்லது அந்த உறவே வேண்டாம் என விவாகரத்துக்குத் தயாராக வேண்டும். பெரும்பாலான தம்பதியரும் தங்களுக்கிடையிலான மனவேற்றுமைக்கும் பிரச்னைகளுக்குமான அடிப்படை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் சண்டையை மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கும் கணவன், தன் மனைவி வெளி வேலையை மட்டும் பார்க்காமல் தன் பெற்றோரைப் பராமரிப்பது, வீட்டுவேலைகளைப் பார்ப்பது போன்றவற்றையும் சேர்த்தே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான்.

அதோடு, தன் கோபக்கார அப்பா மனைவியை ஏதாவது திட்டினால் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டும், மாமியாரின் வசவுகளையும் விமர்சனங்களையும் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். கடந்த தலைமுறை திருமண உறவுகளுக்கும் இந்தத் தலைமுறை திருமண உறவுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்துவிட்டதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்தப் புரிதல் ஏற்படாவிட்டால் திருமண உறவில் சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக்கவே செய்யும்.
இப்படியொரு சூழ்நிலையில் தம்பதியர் என்ன செய்யலாம்? இருவரும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து சில விஷயங்களை கண்டுபிடிக்கலாம்.

நமக்கு ஒரு பிரச்னை வரும்போது அதை எப்படி சமாளிக்கிறோம்? அதே பிரச்னையை நம் பெற்றோர் எப்படி சமாளித்தார்களோ அப்படியே செய்கிறோமா? அல்லது நவீன முறைப்படி அணுகுகிறோமா? அந்தப் பிரச்னையால் உண்டாகிற சிக்கல்களை, மன அழுத்தத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம்? அதிலும் நம் பெற்றோரின் தாக்கம் இருக்கிறதா? அல்லது கால மாற்றத்துக்கேற்ப நம்முடைய பாணியில் எடுத்துக் கொள்கிறோமா?குடும்பத்தில் நம்முடைய பங்கு என்ன? ஒரு பிரச்னை எழுகிற போது அதை அமைதியாக கவனிக்கிறோமா? அல்லது புரட்சியாளராக அணுகுகிறோமா? பீஸ் மேக்கர் என்கிற அமைதி விரும்பிகள் பிரச்னையில் தலையிட்டு அதை சமாதானமாக முடித்து வைக்க விரும்புவார்கள்.

புரட்சியாளர்கள் என்றால் பிரச்னையில் சண்டைபோட்டு அதிலிருந்து கோபத்துடன் வெளியேறுவார்கள். இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம்? சிறு வயதில் நாம் ஒரு குழந்தையாக அடுத்தவரால் காயப்படுத்தப்பட்டிருக்கிறோமா? ஏமாற்றப்பட்டிருக்கிறோமா? அதன் பாதிப்புகளால்தான் இப்போது பிரச்னைகளின் போது ஓவர் ரியாக்ட் செய்கிறோமா? யாராவது நம்மை கன்வின்ஸ் செய்து அவர்கள் வழிக்கு சம்மதிக்க வைத்துவிடுவார்களோ என்று பயப் படுகிறீர்களா? அதன் காரணமாக யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லையா?நான்தான் எப்போதும் சரியானவன்(ள்) என்கிற எண்ணம் கொண்டவரா? தவறுகளை ஒருபோதும்
ஏற்காதவரா?

சிலர் சிறு வயதில் இளவரசர்களாக, இளவரசிகளாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உங்கள் விஷயத்தில் இப்படி நடந்ததுண்டா? சிலர் பெற்றோரால் தன்னம்பிக்கையே இல்லாமல், எதற்கும் உபயோகமற்றவராக வளர்க்கப்பட்டிருப்பார்கள்.

நீங்கள் எப்படி?உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தையோ, அன்பையோ எப்படி வெளிப்படுத்துவது வழக்கம்? கட்டித் தழுவியா? அல்லது வெறும் வார்த்தைகளிலா?குடும்பப் பாரம்பரியங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்? சிலர் பெற்றோர் சொல்வதை அப்படியே ஏற்று நடப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். சிலர் வளைந்து கொடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த எல்லா அணுகுமுறைகளுமே திருமண உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேற்சொன்ன விஷயங்களை சுய ஆராய்ச்சி செய்து நாம் யார், நமது அடையாளம் என்ன, கணவன் – மனைவி உறவில் நமது அணுகுமுறை என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும். புதிதாக இணைந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்கும் இருவரும் அவரவர் பங்குக்கு சுமந்து கொண்டு வந்த விஷயங்கள்தான் காரணம் என்பது அப்போது புரியும்.

இப்படி சுமந்து வந்த விஷயங்களை சடார் என உடைத்துத் தகர்த்து வெளியில் வருவது என்பது எல்லோருக்கும் உடனே சாத்தியமாவதில்லை. இரு தரப்பு குடும்பத்தாரின் தாக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அது சிரமமாகவே இருக்கும்.
இதைத்தான் You can’t go home again…’ என்கிறார் தாமஸ் உல்ஃப். அதாவது, ஒவ்வொருவரும் தான் கடந்து வந்த பாதையை, வாழ்க்கையை இன்னொரு முறை கடக்க முடியாது. அவற்றின் சுவடுகளை சுமந்து கொண்டே தொடர்கிறோம் என்கிறார். உண்மைதானே?
ld4204

Related posts

கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!

nathan

பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்பு

nathan

வாழ்நாள் முழுவதும் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan

பெண்களே அவதானம் ! கர்ப்பிணிகளுக்கு சமீபத்தில் அதிகரிக்கும் பிரச்சனை!!

nathan

நம்பிக்கை தான் வாழ்க்கை

nathan

இரவு நேரத்தில் பிறந்தவர்களா நீங்கள்?? அப்ப உங்க குணம் இப்படி தான் இருக்குமாம்!!

nathan

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

nathan