அலங்காரம்ஃபேஷன்ஆண்களுக்கு

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அழகு மற்றும் அழகு நிலையங்கள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்டது. நமக்கும், அதற்கும் ரொம்ப தூரம் என்று முக்கால்வாசி ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்.

அதுவும் திருமணம் ஆன ஆண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நமக்கு தான் கல்யாணம், குழந்தை, என்றாகிவிட்டதே என்று சலிப்புடனேயே இருப்பார்கள். நாம் ஏன் தோற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் “உற்சாகமில்லா மனநிலை” என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள், இல்லை, இல்லை, இறங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

வாழ்க்கை தொடங்குவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பதை உணருங்கள். உங்கள் செல்ல குழந்தை “எனது அப்பா” என்று நண்பர்களிடமும், உங்கள் அன்பு மனைவி “எனது கணவர்” என்று உற்றார், உறவினர்களிடமும் அறிமுகம் செய்வதில் எப்போதும் ஆனந்தம் அடைவார்கள். அப்போது நீங்கள் பார்க்க நன்றாக இருந்தால் தானே அவர்களுக்கும் பெருமை.

boy1

“நீங்கள் சொல்வதை பார்த்தால் நானும் சிலரை போல பணத்தை அழகு நிலையங்களில் செலவு செய்யவேண்டுமா? காசை கரியாக கரைக்கணுமா?” என்று கேட்பீர்களேயானால் அதுவல்ல நான் கூற நினைப்பது.

சாதாரணமாக முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் என்று ஆரம்பித்து உங்களால் முடிந்ததை, இயன்றதை மாதம் தோறும் தவறாமல் செய்துகொள்ளுங்கள். இதை செலவு என்று ஒருபோதும் நினைக்காதீர், முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

அத்துடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளியுங்கள். ஆம், எப்பொழுதும் சிடுசிடு என்று இருப்பவர்களை யார் தான் ரசிப்பார், சொல்லுங்கள்? இதனால் உங்கள் தன்னம்பிக்கை மட்டுமல்ல செயல்திறனும் கூடும். உங்கள் மனைவி மக்களும் பெருமை கொள்வர்.

ஆண் அலங்காரத்தில் அடுத்த முக்கிய பிரச்சினை தொந்தி. திருமணமான பின்பு ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை, வேலை என்று அலைவார்கள்.

நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு என்று வந்த பின்பு தான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். ஏன் அதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும்?.

“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூற்றிற்கேற்ப தினமும் குறைந்தது ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்து நீங்கள் உடல்நலத்துடனும், மனநலத்துடனும் மட்டுமின்றி தொந்தி இல்லா புற அழகுடனும் இருக்கலாமே.

அடுத்து உடல் துர்நாற்றம். புறஅழகை காக்க நம் மேல் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தினமும் உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தினமும் குளிப்பது.

வெயில் காலங்களில் அவசியம் ஏற்பட்டால் இருமுறை குளிப்பதும் தப்பில்லை. அதேபோல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இருமுறை பல்விளக்குதல், உணவு உண்ட பின்பு, வாய் கொப்பளித்தல், ஏலக்காய் சாப்பிடுதல் என்று சில செயல்களால் அதை தவிர்க்கலாம்.

“கூழ் ஆனாலும் குளித்து குடி, கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று பழமொழிக்கேற்ப ஆடைகளை துவைத்து அணியவேண்டும். ஆடையின் நிறம் மற்றும் அளவு நமக்கு தகுந்தாற் போல் பார்த்து கொள்வது முக்கியம்.

பொத்தான்கள் இல்லாமல் அணிவது, கிழிந்த ஆடைகளை அணிவது என்று இல்லாமல் நாம் அதனை உடனுக்குடன் சரி செய்து அணிதல் வேண்டும்.

வெயில் காலங்களில் மட்டுமின்றி முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கும் நல்லது, பார்க்கவும் நன்றாக இருக்கும். இதை நம்பி இருக்கும் நெசவாளர்களும் மகிழ்வர்.

புற அழகில், நாம் நமது தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து பேணுதல் மிக முக்கியம். நகம் வெட்டுதல், முடி வாருதல், முகம் கழுவுதல் என்று நம்மை நாமே கவனித்து செய்துகொள்ள வேண்டும். காலணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து கருப்பு பூச்சு அணிந்து செல்ல வேண்டும்.

எனது நண்பர் ஒருவர், “பல மேடை பேச்சுகளை கேட்டும், நம்பிக்கை தரும் நூல்களை படித்தும் கிடைக்காத தன்னம்பிக்கை, முடிவெட்டி, சவரம் செய்த பின்பு கண்ணாடியை பார்க்கும் போது கிடைக்கிறது.

அதற்கு அந்த சவரதொழிலாளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்பார். உங்கள் புற அழகை பேணுவதால் உங்கள் தனித்துவம் மேம்படும் என்பதை மறவாதீர்.

நேர்காணலில், பணி இடங்களில் வெற்றி பெற, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெற என்று மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடவைக்கும் வித்தை இது என்பதையும் மறவாதீர். தினமும் சிலநிமிடம் கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்து ரசியுங்கள், உங்களுக்கு நீங்களே முதல் ரசிகனாய்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button