31.1 C
Chennai
Saturday, May 25, 2024
ld4146
மேக்கப்

வேனிட்டி பாக்ஸ் : பெர்ஃப்யூம்

நம் மீது எப்போதும் ஒருவித நறுமணம் கமழும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கிறோம். ஒருசில வாசனைகள் ஒருசிலரின் அடையாளமாகவும் அமைவதுண்டு. கடைகளில் வாங்கும் பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுகிற கெமிக்கல்களையும், அவற்றால் உண்டாகும் பயங்கர விளைவுகளையும் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து யாருக்கு எந்த பெர்ஃப்யூம் பொருந்தும், எந்த வேளைக்கு எந்த பெர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டும், வீட்டிலேயே எளிய முறையில் பெர்ஃப்யூம் தயாரிக்கும் முறை போன்றவற்றை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

உங்களுக்கான பெர்ஃப்யூம் எது?

ஃப்ரெஷ்

ஃப்ரெஷ்ஷான புல்லின் வாசம், பனித்துளியின் வாசம் போன்றவை இந்த ரகம். எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்போருக்கு இது சரியான சாய்ஸ்.

ஃப்ளோரல்

விதம் விதமான பூக்களின் வாசம் கொண்டு தயாரிக்கப்படுபவை. ஒற்றை ரோஜாவின் வாசனை போதும் என நினைப்பவர்கள் முதல் பூந்தோட்டத்தில் இருப்பது போன்ற வாசம் வேண்டும் என நினைப்பவர்கள் வரை, மிதமானது முதல் ஸ்ட்ராங்கானது வரை தேர்ந்தெடுக்க இதில் நிறைய உண்டு. ரோஜா, மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து என ஏகப்பட்ட வாசனைகளில் தேர்ந்தெடுக்கலாம்.

ஓரியன்ட்டல்

வெனிலா, ஆம்பர் போன்றவற்றின் வாசங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை சென்ட்டுகள் ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருக்கும். இரவு நேர பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு ஏற்றவை.

உட்ஸ்

சந்தனம், செடார், ஓக் போன்ற வாசனையான மரங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை. வெட்டிவேர், பைன், பச்சோலி போன்றவற்றின் கலப்பும் இருக்கும். பெரும்பாலும் இவை ஆண்களுக்கானவை.

வாசனைகளைப் புரிந்து கொள்ளுங்கள்?

ஒரு சென்ட் என்பது அதில் கலக்கப்படுகிற பொருட்களின் தன்மைக்கேற்ப 3 நிலைகளில் செயல்படும். அவற்றைத்தான் ஆங்கிலத்தில் நோட்ஸ் (Notes) என்கிறோம். இதன் விளைவாகத்தான் நீங்கள் பெர்ஃப்யூம் அடித்துக் கொண்டதும் உருவாகிற மணம், சிறிது நேரம் கழித்து மாறுகிறது.

டாப் நோட்ஸ் (Top Notes)

ஒரு சென்ட்டை அடித்ததும் உடனடியாக உங்கள் மூக்கு உணர்வது இதைத்தான். அதே வேகத்தில் ஆவியாகி விடும். இது அதிகபட்சமாக 5 முதல் 30 நிமிடங்களே நீடிக்கும்.

மிடில் நோட்ஸ் (Middle Notes)

இதற்கு ஹார்ட் நோட்ஸ் (Heart notes) என்றும் ஒரு பெயர் உண்டு. இவைதான் ஒரு பெர்ஃப்யூமின் மணத்தை – அது எந்த ரகத்தைச் சேர்ந்தது எனத் தீர்மானிப்பவை.

பேஸ் நோட்ஸ் (Base Notes)

ஒரு சென்ட் நீண்ட நேரத்துக்கு அதன் வாசனையைத் தக்க வைத்துக்கொள்ள இவைதான் காரணம். சென்ட் அடித்துக் கொண்ட 20 நிமிடங்களுக்குப் பிறகே இதன் தன்மை வெளிப்படும். ஏதோ பாட்டிலில் கிடைப்பதை வாங்கினோமா, அடித்துக் கொண்டோமா என இருப்பவரா நீங்கள்? அதில் ஏகப்பட்டது உண்டு. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து தேர்வு செய்யுங்கள்.

அப்சல்யூட் (Absolute)

பூக்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிற ஒரிஜினல் மணம். விலை அதிகமாக இருக்கும்.

யு டி கோலன் (Eau de Cologne)

ஆல்கஹாலும் தண்ணீரும் கலந்த கலவையில் 3 முதல் 5 சதவிகித வாசனை எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கும்.

யு டி டாய்லெட்டி (Eau de toilette)

வெறும் ஆல்கஹாலில் 4 முதல் 8 சதவிகித வாசனை எண்ணெய் கலக்கப்பட்டிருக்கும்.

யு டி பார்ஃபர்ம் (Eau de Parfum)

யு டி கோலன் மற்றும் யு டி டாய்லெட்டியை விட விலை அதிகமானது. ஆல்கஹாலில் 15 முதல் 18 சதவிகித வாசனை எண்ணெய் கலப்பு சேர்த்துத் தயாரிக்கப்படுவது இது.

பெர்ஃப்யூம் (Perfume)

ஆல்கஹாலில் 15 முதல் 30 சதவிகித வாசனை எண்ணெய் கலந்து தயாரிக்கப்படுவது. யு டிகோலன், யு டி டாய்லெட்டி மற்றும் யு டி பார்ஃபர்ம் மூன்றையும்விட விலை அதிகமானது.

சில வாசனை தகவல்கள்

எப்போதும் ஒரே வாசனை உள்ள பெர்ஃப்யூமை உபயோகிக்காமல் 2-3 வைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலத்துக்கு மிதமான சென்ட்டுகளும், குளிர் காலத்துக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கானவையும் பயன்படுத்தலாம்.

பகல் நேரத்தில் ஃப்ளோரல் வகையைச் சேர்ந்த சென்ட்டுகளையும் ராத்திரி வேளைகளுக்கு ஓரியன்ட்டல் வகைகளையும்
உபயோகிக்கலாம்.

சென்ட் வாங்கும் போது நேரடியாக உங்கள் சருமத்தின் மேல் அடித்துக் கொள்ளாமல், அதை டெஸ்ட் செய்வதற்கான அட்டையில் முதலில் அடித்துப் பாருங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை முகர்ந்து பார்த்து அப்போதும் அந்த வாசனை உங்களுக்குப் பிடித்தால் வாங்குங்கள்.

சென்ட் வாங்கும் முன் உங்கள் சருமத்தின் தன்மையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ரொம்பவும் உலர்ந்த சருமம் என்றால் சென்ட் சீக்கிரமே மாயமாகும். அதற்கேற்ற ஸ்ட்ராங்கான சென்ட் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏற்கனவே வாசனை அதிகமுள்ள லோஷன், கிரீம், பவுடர் போன்றவற்றை உபயோகிப்பவர் என்றால், நீங்கள் உபயோகிக்கிற சென்ட்டின் மணம் மாறுபடும்.

இயற்கையான பெர்ஃப்யூம்

ஒரு வெள்ளரிக்காயைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். அதை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ளவும். அந்தச் சாறில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றையும், ஒரு டீஸ்பூன் சுத்தமான கற்றாழை ஜெல்லை நன்கு அடித்துக் கலக்கவும். இதில் கொஞ்சம் டிஸ்டில்டு வாட்டர் கலந்து, ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்து சென்ட் போல உபயோகிக்கலாம். இதை வாரம் ஒரு முறை தயாரித்துக் கொள்வது நலம்.

பேஸ் நோட்ஸுக்கு…

செடார்வுட் அல்லது சாண்டல்வுட் ஆயில் – 25 துளிகள்.

மிடில் நோட்ஸுக்கு…

நட்மெக், பேசில், லேவண்டர், ஜெரேனியம், ஜாஸ்மின், கொரியாண்டர்- இவற்றில் ஏதோ ஒன்று – 25 துளிகள்.

டாப் நோட்ஸுக்கு…

மின்ட், பெப்பர்மின்ட், லெமன், லைம், ஆரஞ்சு, பெர்கமாட் – இவற்றில் ஏதேனும் ஒன்று – 25 துளிகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். 1 டீஸ்பூன் ஆல்மண்ட் ஆயில் அல்லது ஜோஜாபா ஆயிலில் அதைக் கலக்கவும். 30 நொடிகளுக்கு நன்கு குலுக்கவும். ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி பெர்ஃப்யூமாக உபயோகிக்கவும்.ld4146

Related posts

கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கான 10 மேக்கப் குறிப்புகள்

nathan

சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி

nathan

அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)

nathan

உதட்டுக்கு மெருகூட்டும் லிப்ஸ்டிக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan

ஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்!

nathan

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

nathan

உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

nathan

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

nathan