மருத்துவ குறிப்பு

ரத்த கசிவை தடுக்கும் தேக்கு இலைகள்

பணம் தரும் தாவரமாக கருதப்படும் தேக்கு மரத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்றைக்கு காணலாம். டெக்டோனா கிராண்டிஸ் என்ற தாவர பெயரை கொண்டுள்ள தேக்கு மரம் மிகவும் உயரமாக வளரக் கூடிய மர வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், கொத்து கொத்தான பூக்கள் மற்றும் காய்களை கொண்டதாகவும் விளங்குகிறது. வாழையைப் போலவே உணவு சாப்பிடுவதற்கும் இதன் பெரிய இலைகளை பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.

தேக்கு மரம் தமிழகத்தை தாயகமாக கொண்ட தாவரம் என்று சொல்லப்படுகிறது. தேக்கு என்ற சொல்லில் இருந்தே இதன் ஆங்கில பெயரான டீக் வுட் வந்தது. சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றால் அரிக்கப்படாத வலுவான தன்மை கொண்டதாக தேக்கு விளங்குகிறது. வீட்டு உபயோக பொருட்களை செய்வதற்கு தேக்கு மிகவும் பயன் உடையது. இத்தனை பெருமைகளை பெற்ற தேக்கு மரம் மருத்துவ குணத்தை கொண்டதாகவும் விளங்குவது இதன் சிறப்பு ஆகும்.

தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும். தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும். இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும். இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது.

தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது. இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்- தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம். பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது. இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது. நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது. %E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 %E0%AE%87%E0%AE%B2%E0%AF%88

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button