மருத்துவ குறிப்பு

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்க அருமையான வழிகள்!!

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும், நன்றாக உடற்பயிற்சி செய்யவும் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். கர்ப்பிணிகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, தங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்குவது அவ்வளவு எளிதல்ல. கர்ப்பிணிகள் தூங்குவதற்குள் பலவிதமான இடர்ப்பாடுகள் ஏற்படும். ஆனாலும் சில கர்ப்பிணிகள் எளிதாகத் தூங்கி விடுவார்கள். கர்ப்பிணிகள் தூங்காமல் இருக்கவும் கூடாது; அளவுக்கு அதிகமாகவும் தூங்கக் கூடாது.

கர்ப்பிணிகளே… நீங்கள் சரியாகவும், நிம்மதியாகவும் தூங்குவதற்கு 7 அருமையான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

காபி மற்றும் டீயைத் தவிர்க்கவும்

பொதுவாகவே, இந்தச் சமயத்தில் காபி மற்றும் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இவற்றைக் குடிப்பதால் குழந்தை பிறக்கும் போது சில தடைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் காபி, டீ அதிகமாகக் குடித்தால், அது தூக்கத்தில் பலவிதமான தொந்தரவுகளையும் கொடுக்கும். எனவே, இவற்றைத் தவிர்த்தால் நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்.

குட்டித் தூக்கம் அவசியம்

கர்ப்ப காலத்தில் அடிக்கடி களைப்பு ஏற்படுவது இயல்பு தான். அதற்கேற்ப கர்ப்பிணிகள் ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவர்களுக்கு நல்லதே! மேலும் கரு வளர்ச்சிக்கும் அது நல்லது. அதிகக் களைப்பைக் காரணம் காட்டி இரவில் அதிகமாகத் தூங்குவது நல்லதல்ல. எனவே, பகலிலேயே அவ்வப்போது குட்டித் தூக்கம் போட்டுக் கொள்ள வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குக் குட்டித் தூக்கம் போட்டால் போதும். அப்போது தான் இரவில் அளவோடும், நிம்மதியாகவும் தூங்க முடியும்!

அளவான சாப்பாடு

இரவு தூங்கப் போகும் முன் அளவோடு சாப்பிடுதல் நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானம் இல்லாமல் போகும்; வயிறு கடமுடாவென்று சத்தம் போடும்; நெஞ்சிலும் தொண்டையிலும் பயங்கர எரிச்சல் ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் சாதாரணமாகவே தூங்க முடியாது. பின் எப்படி கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்க முடியும்? எனவே, இரவு தேவையோடு சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். முடிந்தால், சாப்பிட்டதும் ஒரு சிறு வாக் போய்விட்டு வந்து படுத்தால், இன்னும் நன்றாகத் தூங்கலாம்.

நிறைய நீர்

கர்ப்ப காலத்தில், உடலில் உள்ள தேவையில்லாத அசுத்தங்களும், நச்சுப் பொருட்களும் வெளியேற நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அவை அப்படி வெளியேறினாலே, இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

வசதியான படுக்கை முறை

கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்குவதற்கு முறையான நிலையிலும் வசதியாகவும் படுக்கையில் படுக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்குப் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள் வரும். அதற்கு ஏற்றவாறு படுக்கை விரிப்புகளையும், தலையணையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் கரு இருக்கும் வயிற்றுப் பகுதியிலும் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம். இடது பக்கம் திரும்பிப் படுப்பது கர்ப்பிணிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தம் வேண்டாம்

பொதுவாகவே கர்ப்பிணிகள் மன அழுத்தம் கொள்ளக் கூடாது. அதே மன அழுத்தத்துடன் படுக்கச் சென்றால், நிம்மதியான தூக்கமும் அவர்களுக்குக் கிடைக்காது. இந்தப் பிரச்சனை இருக்கும் கர்ப்பிணிகள், தூங்கச் செல்லும் முன் அவற்றையெல்லாம் மூட்டை கட்டித் தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும், தூங்கச் செல்லும் முன் நன்றாக ஒரு குளியலைப் போட்டு, இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே படுக்கைக்குச் சென்றால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

‘நோ’ உடற்பயிற்சி

கர்ப்பிணிகள் உறங்கச் செல்வதற்கு முன் உடற்பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அது உணர்வுகளை விழிப்போடு இருக்கச் செய்வதால், அவ்வளவு எளிதில் தூக்கம் வராது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, நிம்மதியான தூக்கம் கிடைக்காது. எனவே, படுக்கைக்குப் போகும் முன் பல மணிநேரத்திற்கு முன்பாகவே உடற்பயிற்சிகளை முடித்து விட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button