சரும பராமரிப்பு

தெரிந்துகொள்ளுங்கள்! சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க சில இயற்கை வழிகள்!!!

சாதாரண சருமம் கொண்டவர்களை விட எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும் என்பது தெரியுமா? ஆனால் எண்ணெய் பசை சருமம் இருந்தால், மற்ற சரும பிரச்சனைகளை தவறாமல் சந்திக்கக்கூடும். அதில் என்னவெனில் முகப்பரு, கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைப்பது எப்படி? நீங்கள் உடனே கடைக்கு சென்று எண்ணெயைக் கட்டுப்படுத்தும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவீர்கள். ஆனால் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சருமத்தில் வெளிவரும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம் என்பது தெரியுமா? சரி, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் உள்ளது என்பது கண்டுபிடிப்பது எப்படி? சாதாரண டிஷ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தை துடைக்கும் போது, டிஷ்யூவில் எண்ணெய் போன்று வந்தால், உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்று அர்த்தம்.

பொதுவாக சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை ஏற்படுவதற்கு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி அதிகளவு எண்ணெயை சுரந்து, சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தூவிகள், புகை போன்றவை சருமத்துளைகளில் சென்று சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்போது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை இயற்கை வழியில் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தண்ணீர்

சுடுநீர் சருமத்தை வறட்சி அடையச் செய்யும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எப்போதும் தங்கள் முகத்தை சுடுநீரில் தான் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கலாம்.

தக்காளி

தக்காளியில் நிறைந்துள்ள ஆசிட், சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அதற்கு தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு முகத்தைத் தேய்க்கலாம் அல்லது தக்காளியை அரைத்து தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடலாம். இதனால் நல்ல தீர்வு கிடைக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை குறைக்க, லாவெண்டர் எண்ணெயை பஞ்சில் நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்

தினமும் வெள்ளரிக்காயைக் கொண்டு முகத்தை தேய்த்து மசாஜ் செய்யுங்கள். வேண்டுமானால் வெள்ளரிக்காய் சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் கூட சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதற்கு ஓட்ஸ் பொடியை வேப்பிலை சேர்த்து காய்ச்சிய தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படுத்தப்படுவதோடு, வேப்பிலை தண்ணீர் சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவுக்கும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

பால்

பால் ஒரு சிறப்பான கிளின்சர். எனவே தினமும் பஞ்சில் பாலை நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் நிறைந்துள்ள சிட்ரிக் ஆசிட், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதற்கு எலுமிச்சை சாற்றில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை கூட பருக்கள் வந்து தொல்லை தரும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ஒன்று. அதற்கு கற்றாழை ஜெல்லில், சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வருவது நல்லது.

தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும். ஆகவே தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தை அழகாக பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

தேன்

தேன் சருமத்துளைகளை சுத்தம் செய்து, அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். ஆகவே எந்த ஒரு ஃபேஸ் பேக் போடும் போதும், அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, இறந்த செல்களும் நீங்கும்.

க்ளே/களிமண்

ஒரு பௌலில் க்ளே, தேன், கடலை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button