மருத்துவ குறிப்பு

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாதவிடாய் நிற்காத பெண்கள்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கியுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள பெண்கள்.

குடும்பத்தில் இதற்குமுன் பாட்டி, அம்மா, அக்கா என்று எவருக்காவது மார்பக கேன்சர் இருந்தாலும் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது.

மார்பகக் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?

முடியும்! மாதந்தோறும் மாதவிடாய் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு உங்கள் மார்பகங்களை நீங்களே தடவிப் பார்த்து மார்பகத்தில் கட்டியோ அல்லது தோலில் தடிப்புகளோ தட்டுப்படுகிறதா எனப் பார்க்கலாம். வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனால் ஆரம்பத்திலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடித்து முழுதாக குணமாக்கிவிட முடியும்!

மார்பக சுய பரிசோதனை செய்வது முப்பது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.

முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா என்பது பார்க்கவேண்டும்.

அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு இருக்கிறதா, மார்பகங்களில் மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.

அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும். இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.

இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும்! அதனால் உடனடியாக ட்ரீட்மெண்டும் மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது! ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி நாலணா அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பநிலையிலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடிக்க முடியும்!

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை செய்தால், மார்பகச் சதை அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

மார்பக கேன்சரால் பாதிக்கப்படும் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்த பின்பே மருத்துவரால் அதற்கேற்றபடி சிகிச்சை கொடுக்க முடியும்.

மார்பக கேன்சரின் பாதிப்பு நான்கு நிலைகளாகப் பார்க்கப்படுகிறது.

முதல் நிலையில் மார்பகத்தில் மட்டுமே கேன்சர் இருக்கும். இரண்டாம் நிலையில் மார்பகம் தவிர அக்குகளிலும் பரவி இருக்கும். மூன்றாம் நிலையில் கேன்சர் பாதிப்பு மார்பகத்திலிருந்து நெஞ்சு.. அக்குள் என்று மிக பலமாகப் பரவிட்டிருக்கும். நான்காவது நிலையில், மார்பகம் அருகேயுள்ள மற்ற உடற்பாகங்களை நுரையீரல், எலும்புகள் மற்றும் ஈரல் போன்றவற்றிலும் கேன்சர் ஊடுருவி பரவியிருக்கும்!
17084

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button