27.1 C
Chennai
Tuesday, Dec 10, 2024
Badhusha
இனிப்பு வகைகள்

பாதுஷா

தேவையான பொருள்கள்:

மைதா – 2 கப்
வெண்ணெய் – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
தயிர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு
ஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)
கேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..
வெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.
தேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.
பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.
சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
(பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.
ஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.
இன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.
அடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு- மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.
எல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.
பொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.
பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
Badhusha

* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.

* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.

* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.

Related posts

மினி பாதாம் பர்பி

nathan

பிரட் ஜாமூன்

nathan

பீட்ரூட் அல்வா

nathan

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி செய்வது எப்படி

nathan

விளாம்பழ அல்வா

nathan

கேரட் அல்வா

nathan

வெல்ல பப்டி

nathan