மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! வாதக்கோளாறுகளை விரட்ட… முடக்கத்தான் சாப்பிடுங்க!

முடக்கத்தான்
என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும்
சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம்
மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி
வகையைச் சேர்ந்தது. நகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை
கிடைக்கும்.

மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது
முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக,
வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல
நிவாரணம் தரக்கூடியது.

ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில்
போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி
வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.
பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம்.
பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது
நின்றுவிடும். இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய
வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி
பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை
சேர்த்துக்கொள்ளலாம். அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான்
கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை
அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான்
என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம்.
காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான்
கீரையைச் சமைத்து உண்ணலாம்.

இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள்
ஏராளமாக உள்ளனர். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம்
கிடைக்காத நிலையில், பக்கவிளைவுகளே ஏற்படுகின்றன. அவர்கள் முடக்கத்தான்
ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். ஒரு கைப்பிடி
முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி
ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து
பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக, இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button