உருளைக்கிழங்கு சாம்பார்

தென்னிந்தியாவில் சாம்பார் மிகவும் பிரபலமான ஒன்று. அத்தகைய சாம்பாரில் பல வெரைட்டிகள் உள்ளன. அந்த வெரைட்டிகள் அனைத்தும் நம் விருப்பத்தை பொறுத்தாகும். ஏனெனில் நமக்கு எந்த காய்கறிகளை பிடிக்கிறதோ, அதை சேர்த்து செய்தால், அது ஒரு வகையான சாம்பார். அந்த வகையில் இங்கு பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சாம்பார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உருளைக்கிழங்கு சாம்பாரில் துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்து செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியபக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது) ப
ச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு.
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்ழுன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 20-30 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு நன்கு வெந்த பின், அதில் சாம்பார் பொடி, புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

பின்பு மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சாம்பாரை ஊற்றி கிளறி, மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு சாம்பார் ரெடி!!

Leave a Reply