ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? கொரோனா பாதித்தவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!

கொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு பின் உள்ள அறிவியல் என்ன, இதெல்லாம் ஏன் நல்லது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவருக்காவது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும். முதல் அலையில் சிலர் எங்கோ யாருக்கோ கொரோனா என்று கேட்ட செய்திகள் எல்லாம், இந்த இரண்டாம் அலையில் மாறி, பலரும் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டார்கள்.

நீங்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டோ, அல்லது கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தால், நீங்கள் என்ன உணவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம். இது உங்களை அச்சப்படுத்த அல்ல, உங்கள் உணவு உங்கள் உடலை மீட்டெடுக்கும் சக்தியை பெற்றிருக்கிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதை சார்ந்தே உங்கள் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த கொரோனா காலத்தில் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

சரி. கொரோனா கால உணவு குறித்த சில கேள்விகளுக்கு எளிமையான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இதற்காக ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

கேள்வி: கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்கள் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? மஞ்சள், மிளகு எல்லாம் நல்லது என்று சொல்லப்படுகிறது? அது எதனால்?

பதில்: கொரோனா காலத்தில் அதிகம் பேசக்கூடிய விஷயம் நோய் எதிர்ப்பு திறன். கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளவும், எதிர்த்து போராடவும் இது அவசியம். இது தெரிந்த விஷயம்தான். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு Anti – Oxidants அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Oxygen Radical Absorbance Capacity. இதனை ORAC Value என்று அழைப்போம். ஒரு சில உணவுகளில் இந்த ORAC Value மிக அதிகமாக இருக்கிறது.

ஜீரகம், வால்நட், முருங்கக்கீரை, மஞ்சள், பட்டை, மிளகு, கொக்கோ இந்த உணவுகளுக்கு எல்லாம் மிக மிக அதிக ORAC Value இருக்கிறது.

இவற்றை சாதாரணமாகாவே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா காலத்தில் இதெல்லாம் பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் இதுதான். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை உதவும்.

ஆனால், அதற்காக இவற்றையெல்லாம் அதிகளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது.

உதாரணமாக மஞ்சளை எடுத்துக் கொள்கிறேன். சமையலில் சேர்க்கும் மஞ்சத் தூளை தவிர்த்து, காலையில் இரண்டு சிட்டிகை, இரவில் இரண்டு சிட்டிகை மஞ்சள் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் அதிகம் எடுத்துக் கொண்டால் கல்லீரலில் வீக்கம் வரலாம்.

அதே போல எப்போதும் மஞ்சள் எடுக்கும்போது மிளகையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மஞ்சளில் இருப்பது குர்குமின். மிளகில் உள்ள பெப்ரின் சேர்க்கப்படும்போதுதான் அந்த குர்குமின் உடலில் வேலை செய்யும். உதாரணமாக நீங்கள் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கிறீர்கள் என்றால், அதில் கொஞ்சம் மிளகையும் பொடி செய்து சேர்க்க வேண்டும்.

அதே போன்றுதான் பட்டையும். நாள் ஒன்றுக்கு 2-4 சிட்டிகை மூன்று மாதங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கக் கூடாது.

அடுத்து முருங்கக்கீரை. இதில் வைட்டமின்-சி, இரும்புச் சத்து, நார்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்சுடன், இருப்பதிலேயே மிக அதிகமான ORAC Value கொண்டுள்ள உணவு.

இதெல்லாம் கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் போதும், கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளவும் எடுக்க வேண்டிய உணவுகள்.

நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த உணவுகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. அனைத்து சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அனைத்து விதமான வைட்டமின்களும், மினரல்களும் அதற்கு தேவை.

கேள்வி: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் தண்ணீர் மற்றும் நிறைய நீராகாரங்கள் (Liquids and fluids) எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எந்த மாதிரியான நீராகாரங்கள் எடுத்துக் கொள்ளலாம்?

பதில்: நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. சர்க்கரை, வெள்ளம், தேன் போடாமல் வெறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடலுக்கு நல்லது. முருங்கக்கீரை சூப், தக்காளி சூப், காய்கறி சூப், ரசம், வெதுவெதுப்பான பால் ஆகியவற்றை குடிக்கலாம்.

ABC ஜூஸ் – ஆப்பிளி, பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்து, சர்க்கரை போடாமல் ஜூஸ் குடிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிக்கலாம்.

இதனால் உடலில் உள்ள ஆக்சிஜன் சேச்சுரேஷன் அளவு சரியாக இருக்கும். அதற்காக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுத்தால், ஆக்சிஜன் அளவு சீராகுமா என்று கேட்கக்கூடாது. மருத்துவமனை தேவைப்படாத, வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் இதெல்லாம் சாப்பிட்டு, உடலை தேற்றிக் கொள்ளலாம்.

தேவையான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

கேள்வி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?

முதல் விஷயம், கட்டாயம் மது அருந்தக் கூடாது. அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். மேலும் இதனால் பதற்றம் அதிகரிக்கலாம்.

பழச்சாறுகள், இளநீர், கூல் டிரிங்க்ஸ், ஐஸ்க்ரீம், பால் சேர்த்த இனிப்புகள் மற்றும் சாதாரண இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் இவற்றில் கார்போஹைட்ரேடுகள் அதிகம். இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் கார்பன் டை-ஆக்சைடு அதிகமாகும். இதனால், உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறையலாம். குறிப்பாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இது பொருந்தும்.

நீங்கள் தீவிர கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றாலும், உங்கள் நிலை இன்னும் மோசமாகாமல் இருக்க, இதையெல்லாம் தவிர்ப்பது நல்லது.

மேலும், நூடுல்ஸ், பாஸ்டா, பிரட், பிஸ்கட் போன்ற மைதா சார்ந்த உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

சத்துகள் நிறைந்த உணவு சாப்பிடுவது அவசியம். கார்ப்ஸ் எடுக்கலாம் ஆனால் Simple Carbohydrates-ஐ தவிர்க்க வேண்டும். உதாரணமாக எப்போதும் போல ஒரு குறிப்பிட்ட அளவு சாதம் சாப்பிடலாம். ஆனால், Junk food, இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவையும் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரத்தில் இளநீர் சாப்பிடலாம்.

கேள்வி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறைச்சி எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: வீட்டில் சமைத்த இறைச்சி சாப்பிடலாம். முக்கியமாக அவை சுத்தமாக இருக்க வேண்டும். முழுமையாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சமைத்த உடனே சாப்பிட வேண்டும்.

முட்டை சிறந்தது. பொரிக்க வேண்டாம். வேக வைத்து சாப்பிடலாம்.

சுத்தமாக சமைக்கப்பட்ட மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடலாம்.

வாந்தி, வயிற்றுப் போக்கு இருந்தால், இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

கேள்வி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, பதற்றம் ஆகியவை அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்த ஏதேனும் உணவுகள் இருக்கிறதா?

பதில்: இதற்கு தயிர் சாதம் சிறந்த உணவு. வெதுவெதுப்பான நீரில் தயிர் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் இருக்கக்கூடிய டார்க் சாக்லேட், தூங்கும் முன் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம்.

சர்க்கரை அல்லது இருதய நோய் இருப்பவர்கள் டார்க் சாக்லேட்டை தவிர்க்கலாம்.

கேள்வி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் என்ன தொடர்பு?

பதில்: கொரோனா காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு திறனை சிறப்பாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு நீங்கள் சிறந்த சத்தான உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

எளிமையாக சொல்ல வேண்டுமானால், உங்கள் உடலில் ஏதேனும் சத்துகள் குறைந்தால், அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். அனைத்து விதமான சத்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவால் மட்டுமே உங்கள் நோய் எதிர்ப்பு திறன் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சத்தான உணவு ஒரு முக்கிய காரணி..

உங்கள் மரபணுக்கள் (Genes), நீங்கள் வாழும் இடம் (Environment), உணவு (Nutrition), ஆரோக்கியம் இதெல்லாம் சார்ந்தே ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலம் அமையும்.

உணவை பொறுத்த வரை அனைத்து விதமான சத்துகள் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பழம், காய்கறிகள், இறைச்சி, தானியங்கள் என அனைத்து விதமான உணவுகளையும் சமமாக எடுத்துக் கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button