ஹேர் கண்டிஷனர்

கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்!

மஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.. என சுவை சொட்டும் இதன் வகைகள் ஏராளம்; அது தரும் சரும பலன்களும் தாராளம்! வயோதிகத்தைத் தள்ளி வைத்து, இளமையை தக்க வைத்து நம் வனப்பைக் கூட்டும் வாழைப்பழத்தின் அழகு பலன்களைப் பார்ப்போமா?

வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது ‘வாழைப்பழ பேஸ்ட்’..

ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம் என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
இந்த வாழை – வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.

வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் சீஸ் அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்-மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும். சருமத் தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.

கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்!
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், ரெண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.

இதயத்தை வலிமையாக்கும் வாழை!

ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:

” ‘இயற்கை குளுக்கோஸ்’ என்று கொண்டாடப்படும் வாழைப்பழம், நமக்கு விட்டமின் ஏ மற்றும் விட்டமின் ஈ சத்துகளை அள்ளித் தருகிறது.

இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டு வருபவர்கள் தினம் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

மஞ்சள்காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் தேங்கும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம்.

தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம். ஒரு பேயன் வாழைப்பழத்-துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

செவ்வாழையில் விட்டமின் ஏ சத்து கொட்டிக் கிடக்கிறது. இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொரி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை சீராக்கும். நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்-படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.
நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

வயிறு நிறைந்திருக்கும்போது வாழைப் பழம் சாப்பிட்டால், அது தொண்டையி-லேயே தங்கி விடும். இதனால் சிலருக்கு சளி ஏற்படுகிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்டபின் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் பருகுங்கள். சளி ஏற்படாது.”
banane

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button