ஆரோக்கியம் குறிப்புகள்

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

பொது இடங்களில் நம் மானத்தை வாங்க கூடிய ஒன்று ஏப்பம். வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம், அது வயிற்றில் சேர்ந்துவிடுகிறது.

அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, பரபரப்பாக இருக்கும்போது, காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, வெற்றிலை, பாக்கு, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, காபி, பால், டீ, தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.

சிலருக்கு இந்தக் காற்று விழுங்கல் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு ‘ஏரோபேஜியா’ (Aerophagia) என்று பெயர். ஏப்பத்துக்கான காரணம் என்னவாக இருந்தாலும் விழுங்கிய காற்று இரைப்பையிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையா? இதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் தற்காப்பு வழிதான் ஏப்பம்(Belching).

நாம் உணவுடன் விழுங்கிய காற்று மிகவும் கொஞ்சமாக இருந்தால் இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் கலந்து சிறுகுடலுக்குச் சென்றுவிடும்.

இதன் அளவு அதிகமானால் இரைப்பைக்குத் திண்டாட்டம். இதனால் வயிறு உப்பிக்கொள்கிறது. இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, அதை வெளியேற்ற வழி பார்க்கும். தனக்குள்ள சிரமத்தைக் குறைக்க உதரவிதானத்தின் உதவியைக் கேட்கும்.

அதுவும் சம்மதித்துக் கீழே இறங்கி இரைப்பையைப் பலமாக அழுத்தும்.

இந்த அழுத்தத்தை ஈடுகட்ட இரைப்பைத் தசைகள் எல்லாமே ஒன்றுகூடி மேல்நோக்கி அழுத்தம் கொடுக்கும்.

இந்த அதீத அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உணவுக் குழாயின் கீழ்க் கதவும் மேல் கதவும் திறந்துகொள்ள, இரைப்பை தன்னிடமுள்ள காற்றை ஒருவித சத்தத்துடன் வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம்.

ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் பிரச்சினை இல்லை. அதுவே அடிக்கடி வருமானால் வயிற்றில் பிரச்சினை இருக்கிறது. அது சாதாரண அஜீரணக் கோளாறாகவும் இருக்கலாம். இரைப்பை அல்சர், அசிடிட்டி, புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம்.

கல்லீரல், பித்தப்பை, கணையக் கோளாறாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

தடுப்பதற்கான வழிகள்!

அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டே சாப்பிட உட்காராதீர்கள். அப்படி உட்கார்ந்தால் பரபரப்பாக, அவசர அவசரமாகச் சாப்பிடுவீர்கள்.

அதேவேளையில் சாப்பிட்ட பின்பு அலுவலகத்துக்குக் கிளம்பும் தயாரிப்பு வேலைகளைச் செய்யுங்கள். பரபரப்பு குறைந்துவிடும்.

சாப்பிடும்போது பேசாதீர்கள், கோபத்தோடும் கவலையோடும் சாப்பிடாதீர்கள். வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே, அடுத்த கவளம் உள்ளே போகவேண்டும்.

காரம், மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ஆவியில் அவித்த உணவு வகைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா மற்றும் காற்றடைத்த பாட்டில் பானங்களைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது. மது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா இவற்றையெல்லாம் ஓரங்கட்டுங்கள்.
eppam 002

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button