தலைமுடி சிகிச்சை

அழகு குறிப்புகள்:முடிக்கு முக்கியத்துவம் தர்றீங்களா?

‘உரோமம்’ எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சு வழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.

உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.
பொடுகு – ‘செபோரிக் டெர்மட்டைட்டிஸ்’ எனப்படுகிறது. தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். செதில் போல் லேசாக உதிரும்.

முடி உதிர்தல்

முடி இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது ‘அலோபேசியா’ எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் ‘அலோபெக்ஸ்’ என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை ‘வழுக்கை’க்குக் காரணமாகின்றன.

புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும். மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்கவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் 2 ரோம அமைப்பு உள்ளது.

காக்கும் முடிகள்

புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன. தோலுக்கு மேலாக உள்ள முடியை நீக்குவது ‘டெபிலேஷன்’ எனப்படுகிறது.

மயிர்க்கூச்செரிதல்

குளிரில் நமக்குப் பற்கள் கிடுகிடுக்கும்போது வேர்க்கால்களை ஒட்டிய ‘அரெக்டார் பைலி’ தசைகள் நிமிர்கின்றன. அதனால், முடியும் குத்திட்டு நிற்கிறது. இதன் விளைவாக, முடி அடுக்கு, வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதை ‘மயிர்க்கூச்செரிதல்’ என்கிறோம். மருத்துவரீதியாக இது ‘பைலோஎரெக்ஷன்’ எனப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, முடி அப்படியே தோலோடு ஒட்டிக்கொள்கிறது. எனவே வெப்பம் தக்க வைக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

முடியை அகற்றும் முறைகள்

முடியை நீக்கும் ‘கிரீம்கள்’- இவற்றை முடி மீது பூச வேண்டும். அகற்றப்படும் முடிகள் 2- 5 நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும்.

சவரம் – ரேசர் பிளேடை பயன்படுத்திச் செய்வது. சில மணி நேரத்தில் முடி வளரத் தொடங்கிவிடும்.
வாக்சிங் – ஒட்டக்கூடிய சூடான மெழுகையும், ஒரு துண்டுக் காகிதம் அல்லது துணியையும் பயன்படுத்தி மேற்கொள்வது. நான்கு முதல் ஒன்பது வாரங்களில் முடி மறுபடி வளரும்.
த்ரெட்டிங் – முடிச்சிட்ட நூலால் முடியை அகற்றுவது.

எலக்ட்ரோலிசிஸ் – சிறுபரப்புகளுக்குப் பயனுள்ளது. நிரந்தரமாக முடியகற்ற உதவுகிறது.
எபிலேட்டர் – முடியை வேர்ப்பையுடன் முழுமையாக அகற்றுகிறது.

லேசர் – கரிய, கரடுமுரடான முடி, ‘என்டி- ஓய்ஏஜி’ லேசரை ஈர்த்து உதிர்கிறது. இதன்மூலம் 80- 90 சதவீத முடியை அகற்றலாம்.

நமக்கு ‘வேகம்’ அதிகம்!

ஆசியக் கண்டத்தினரான நமது முடி வேகமாக வளர்கிறது. அதாவது, மாதம் 1.3 செ.மீ. என்ற அளவுக்கு. ஆனால் நமது முடியின் அடர்த்தி குறைவு, மெல்லியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தினரின் முடிதான் மெதுவாக வளர்வது. மாதத்துக்கு 0.9 செ.மீ. ஆனால் அது, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் முடியை விட அடர்த்தியானது. தலை தோலை ஒட்டியே வளரும் இது, சுருண்டுகொள்கிறது. காகேசிய இனத்தவரின் முடிதான் உலகிலேயே அடர்த்தியானது. அது, மாதத்துக்கு 1.2 செ.மீ. நீளம் வளர்கிறது.

***
1. வேர்ப்பை – முடியில் உயிருள்ள ஒரே பகுதி. முடி வேரின் அடிப்பகுதி, குமிழ் எனப்படுகிறது.
2. செபேசியஸ் சுரப்பிகள்- முடிக்கு எண்ணெய்ப் பளபளப்பை அளிக்கின்றன.
3. டெர்மிஸ்- எபிடெர்மிஸூக்கு கீழ் உள்ள தோல் அடுக்கு. இங்குதான் முடியின் வேர்ப்பை புதைந்துள்ளது.
4. மெடுல்லா- உள்ளார்ந்த பகுதி. அனைத்து முடிகளிலும் காணப்படுவதில்லை.
5. கார்ட்டெக்ஸ்- முடியின் நடு அடுக்கு. முடியின் பலத்துக்கான அடிப்படை ஆதாரம். முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் ‘மெலனினை’ கொண்டிருக்கிறது. முடியின் வடிவத்தைத் தீர்மானிப்பது இதுதான்.
6. க்யூட்டிக்கிள் – முடியின் வெளிப்புற அடுக்கு.
****

* தினசரி 100- 150 முடிகள் உதிர்வது இயல்பானது.
* 100 முடி இழைகளால் 10 கிலோ எடையைத் தூக்க முடியும்.
* இங்கிலாந்தில் 55 சதவீதக் குழந்தைகள் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் நுண்ணிய ‘வெல்லஸ்’ முடிகளால் மூடப்பட்டுள்ளது.
* மாவீரன் நெப்போலியனின் முடியில் ‘ஆர்சனிக்’ விஷம் காணப்பட்டது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
* தலைமுடியானது அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து உடலைக் காக்கிறது. பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
* ஒரு முடிக் கற்றையால் அதன் எடையைப் போல் 30 சதவீத தண்­ணீரைக் கிரகித்துக் கொள்ள முடியும்.
***

பாலிக்யூலிட்டீஸ் – வேர்ப்பையில் ஏற்படும் வீக்கம். முடியை அகற்றும்போது மோசமான சுகாதாரத்தால் இது ஏற்படக்கூடும்.
ஹிருசுட்டிசம் – அதிகமாக முடியடர்ந்து காணப்படுவது. குறிப்பாக, முகத்திலும், உடம்பிலும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை, மருந்துகளின் பக்கவிளைவுகளால் இந்நிலை ஏற்படலாம்.
பேன் – ரத்தம் குடிக்கும் சிறு பூச்சியினம். முடியின் அடிப்பகுதியை இறுகப் பற்றிக்கொள்ளும் இவை, முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. மருந்து சேர்த்த ஷாம்புகள், லோஷன்கள், நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் மூலம் பேன்களை அகற்றலாம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பேன் பரவுவது, ‘பெடிகுலோசிஸ்’ எனப்படுகிறது. சீப்புகள், தொப்பிகள், துண்டுகள், தலையணைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வது, அருகாமை போன்றவற்றால் பேன்கள் பரவலாம்.
azhagutips 30 jpg 1130

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button