ஆரோக்கியம் குறிப்புகள்

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

அழகு நிலையங்களிலும் அழகைப் பராமரிக்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை ‘anti aging’.

சருமத்தைப் பராமரிக்கவும் சுருக்கங்களை நீக்கவும் பலவகை கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட, இவை மட்டுமே போதுமா?

தோலின் சுருக்கம் மட்டுமே முதுமைக்கான அறிகுறியா? முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையைத் தக்கவைப்பது சாத்தியமா? அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

சென்னை அப்பல்லோவின் சரும நோய் நிபுணர் டாக்டர் கே.பிரியாவைச் சந்தித்தோம்.

சிலருக்கு இளம் வயதிலேயே சருமம் பாதிக்கப்படுவது ஏன்?

”நம் உடலின் முக்கிய உறுப்பு தோல். சிலருக்கு பரம்பரையாகவே, மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும். வயதானாலும் தோலில் சுருக்கம், தலைமுடி நரைக்காது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே தோல் வறண்டு, சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும். இதற்கு சருமத்தில் ஏற்படும் வறட்சிதான் காரணம்.”

எதனால் இந்தப் பாதிப்பு?

”சூரிய ஒளி மற்றும் செயற்கை விளக்குகளில் நீண்ட நேரம் இருப்பது, கம்ப்யூட்டர், ஐ-பேட் அதிகம் பயன்படுத்துவது, டிவியை அருகில் உட்கார்ந்து பார்ப்பது போன்ற காரணங்களால் புற ஊதாக் கதிர் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிக அளவில் அழகு நிலைய சிகிச்சைகள் மேற்கொள்வதும் இளமை சருமத்துக்கு ஆபத்துதான். உதாரணத்துக்கு… நம் நகத்தைச் சுற்றி, நகத்தையும் தோலையும் இணைக்கும் ‘க்யூட்டிகிள்’ என்ற இயற்கையான பாதுகாப்பு, பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் காளான் கிருமிகளிலிருந்து காப்பாற்றும். பெடிக்யூர், மேனிக்யூர் செய்துகொள்ளும்போது கை, கால்களில் உள்ள அழுக்குடன் சேர்த்து ‘க்யூட்டிகிள்’ பகுதியையும் எடுத்துவிடுவார்கள். இதனால், நோய்த்தொற்று நகத்துக்குள் எளிதாகப் புகுந்து, நகச்சுத்தி, நிறமாற்றம், சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் பயன்படுத்தும், சில சரும சிகிச்சை சாதனங்களில் மஞ்சள், சந்தனம், கிளிசரின் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரெஸ் பழங்களின் செயற்கை ரசாயனம் கலந்திருக்கலாம். அதில் தயாரிக்கப்பட்ட சோப், க்ரீம், பவுடரைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவை வெயிலை அதிகம் உறிஞ்சும் தன்மையை ஏற்படுத்தும். இதனால், முகத்தில் கரும்புள்ளிகள், மங்கு, தடிப்புகள் வரும். உதடு வறண்டு வெடித்துப் போகலாம்.

கேசத்துக்குப் பயன்படுத்தும் ஹேர் டையில் இருக்கும் ‘பாராபினலீன் டையமின்’ (PPD) என்ற ரசாயனத்தால், முகத்தில், மங்கு, கரும்புள்ளிகள், சிவப்புத் தடிப்புகள், வெயிலால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுவதாலும், சீக்கிரமே வயோதிகத் தோற்றம் வந்துவிடும். அதிக மன அழுத்தமும் இளமையிலேயே முதுமைத் தோற்றம் வர ஒரு காரணம்.”

இந்தப் பாதிப்புகளிலிருந்து சருமத்தை எப்படிப் பாதுகாப்பது?

”தோல் சுருங்கி, பொலிவை இழப்பதற்கு தைராய்டு, ரத்தசோகை, சர்க்கரை நோய், சத்துக் குறைபாடு, நீர்ச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் தவறான அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு காரணம் என்றால், அவற்றுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும்.

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து மீள, பருத்தி ஆடைகள் அணியலாம். சருமத்தை மறைக்கக்கூடிய க்ளோஸ் நெக், முழுக்கை ஆடைகளையும் பயன்படுத்தலாம்.

தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். மோர், பழச்சாறு அல்லது இளநீர் குடிக்கலாம்.

‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ நிறைந்த மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, பச்சை நிறக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் தோலின் இளமையைத் தக்கவைக்கலாம்.

வெண்ணெய், சீஸ், சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ரசாயனம் அதிகம் இல்லாத சோப், ஷாம்பூக்களை பயன்படுத்தவேண்டும். பகல்வேளையில், நம் உடலில் வெளியே தெரியும் பகுதிகளில், எஸ்.பி.எஃப்.25 (Sun Protection Factor 25) உள்ள ‘சன் ஸ்கிரீன்’ லோஷனை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவிக்கொள்ளலாம்.

கடுமையான ரசாயனப் பொருட்கள் கலந்த டிடெர்ஜென்ட், சோப்களைப் பயன்படுத்தக்கூடாது. தவிர்க்க முடியாதபட்சத்தில், கையுறை அணிவது நல்லது.

தினமும் இரண்டு வேளை குளிக்கவேண்டும். அதில் ஒருமுறையாவது தலைக்குக் குளிக்க வேண்டும். வியர்வையினால், உடலில் துர்நாற்றம், பொடுகு, பூஞ்சைக் காளான் போன்ற நோய்த்தொற்று ஏற்படும்.

வறண்ட சருமத்தினர் குளித்ததும் கட்டாயம் நல்ல தரமான மாய்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம் தேவை. சீரான கால அளவு தூங்கும்போது, உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக, தோல் வளமாக இருக்கத் தேவையான ‘குரோத் ஹார்மோன்’, அதிலிருந்து சுரக்கும் கொலாஜன், ஹையலூரானிக் ஆசிட் (Collagen & Hyaluronic acid) போன்றவற்றின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது.

சத்தான உணவு, போதிய தூக்கம், ‘போதும்’ என்ற மனம்… இவையே சுருக்கங்கள் அற்ற, இளமையான சருமத்தின் எளிய ஃபார்முலா!”

மித்ரா

படங்கள்: ஜெ.தான்யராஜூ

மாடல்: ஆதிரா

* திருத்தப்பட்ட வடிவம்

சிகிச்சை முறைகள்:

மைக்ரோடெர்மாப்ரேஷன் (Microdermabrasion): தோலில் உள்ள அழுக்கை உறிஞ்சி எடுத்து, கிறிஸ்டல் பாலீஷ் மற்றும் டயமண்ட் பாலீஷ் முறையால் சுருக்கங்கள், மாசு, பருக்கள் மற்றும் தழும்புகளை அகற்றலாம்.

‘பீல்ஸ்’ (Peels): இந்த ‘கெமிக்கல் பீலிங்’ முறையில், தோலின் பொலிவு, நிறத்தைக் கூட்டி, பருக்களைக் குறைக்கலாம்.

லேசர்: தேவையற்ற ரோமத்தை அகற்றி, தழும்புகளை நீக்கலாம்.

போடாக்ஸ்: முகத்திலுள்ள சுருக்கங்களை முற்றிலுமாக நீக்குவது. இதன் மூலம் முகத்தின் வடிவத்தையே மாற்றி அமைக்கலாம். தாடை, கழுத்து போன்ற இடங்களில் தளர்ந்த தோலை இறுக்கி, மாற்றி அமைக்கலாம். இது 6 மாத காலம் வரை மட்டுமே நீடிக்கும்.

ஃபில்லர்ஸ்: நம் தோலில் இருக்கும் சில பொருட்களைச் செயற்கையான முறையில் தயாரித்து, ஊசி மூலம் நிரப்புவதன் மூலம் ஒட்டிப்போன, தொங்கிப்போன கன்னங்களை சீராக்கலாம். மெல்லிய உதடுகளைப் பெரிதாகவும் அழகாகவும் வடிவமைக்கலாம்.

இவை எல்லாமே 5 – 10 நிமிடங்களில் செய்யக் கூடியவை. மேலும், இந்த சிகிச்சை முறையில் மருத்துவரிடம் இவற்றைச் செய்துகொள்ளும்போது, பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.
p62

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button