சரும பராமரிப்பு

தழும்புகளை தவிர்க்க முடியுமா?

தாய்மையின் பெருமை உணர்த்தும் வீர அடையாளமே அவளது வயிற்றில் உண்டாகிற தழும்புகள். அதை அழகின்மையின் வெளிப்பாடாகப் பார்க்கும் பெண்களுக்கு தழும்புகள் தர்மசங்கடத்தையே தருகின்றன. கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படுவதன் பின்னணி, அதிலிருந்து மீளும் வழிகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.

கர்ப்ப காலத்தில் குழந்தை வளர வளர, அதற்கு இடமளிக்க வயிற்றுத் தசைகளானது விரிந்து கொடுக்கும். அதன் விளைவாக சருமப் பகுதி விரிந்து, தழும்புகள் உண்டாகும். பிரசவ காலத் தழும்புகள் என்பவை வயிற்றுப் பகுதியில் மட்டும்தான் வரும் என்றில்லை. சில பெண்களுக்கு இவை இடுப்பு, பின்பக்கம், தொடைகள் மற்றும் மார்பகங்களிலும் வரலாம். சருமத்துக்கு அடியிலுள்ள திசுக்களின் மீள்தன்மையில் ஏற்படுகிற மாற்றங்களே தழும்புகளுக்கான காரணம்.

90 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்பத்தின் 6வது மாதத்துக்குப் பிறகு இந்தத் தழும்புகள் ஆரம்பிக்கின்றன. அம்மாவுக்கு பிரசவ காலத்தில் இந்தத் தழும்புகள் இருந்தால், மகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதாவது, இது பரம்பரையாகவும் தொடரலாம். அதே போல இள வயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் தழும்பு களுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம். கர்ப்ப காலத்தில் அதிக எடை உடையவர்களுக்கும், ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும், பனிக்குட நீரானது அளவுக்கதிகமாக இருப்பவர்களுக்கும் கர்ப்பத்தின் போதான தழும்புகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். சிவந்த சரும நிறம் கொண்டவர்களுக்கு லைட் பிங்க் நிறத்திலும், கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு அவர்களது சருமத்தை விட சற்றே வெளிர் நிறத்திலும் தழும்புகள் உருவாகும்.

தீர்வு உண்டா?

க்ரீமோ, லோஷனோ, எண்ணெயோ கொண்டு தழும்புகளை வரவிடாமல் செய்ய எந்த வழிகளும் இல்லை. வயிற்றுப் பகுதியின் தசைகளை வறள விடாமல், ஈரப்பதத்துடன் இருக்குமாறு தரமான ஸ்கின் க்ரீம் அல்லது லோஷன் தடவிக் கொள்வது ஓரளவு பலன் தரும்.பிரசவமான 6 முதல் 12 மாதங்களில் இந்தத் தழும்புகள் கொஞ்சம் மறையத் தொடங்கும். அழுத்தமான, அடர் நிறத் தழும்புகள் வெளிற ஆரம்பிக்கும். தழும்புகள் உண்டான சுவடே தெரியாத அளவுக்கு முற்றிலும் மறையும் என்பது சாத்தியமே இல்லை.

பிரசவத்துக்குப் பிறகும் கொஞ்சமும் மாறாமல் உறுத்தும் தழும்புகளைப் போக்க சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். கிளைகாலிக் அமிலம், Hyaluronic அமிலம் போன்றவை கலந்த சரும க்ரீம்களை மருத்துவர் பரிந்துரைப்பார். ரெட்டினாய்டு ஆயின்மென்ட்டுகள் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜனை தூண்டுவதில் வேகமாகச் செயல்பட்டு, தழும்புகளை மறைக்கும் என்றாலும், இவற்றை கர்ப்ப காலத்தில் உபயோகிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

அம்மாவுக்கு பிரசவ காலத்தில் இந்தத் தழும்புகள் இருந்தால், மகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதே போல இள வயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் தழும்புகளுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம்.
11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button