தலைமுடி சிகிச்சை

குளிரில் கொட்டுமா முடி?

கோடைப் பருவநிலைதான் நம்முடைய சருமம், முடி. போன்றவைகளைப் பாதிக்கும் மிக மோசமான காலம் என்று நினைக்கிறோம். மழை மற்றும் குளிர்காலங்களில் சருமம் மற்றும் முடி பற்றிய கவலையின்றி இருக்கிறோம். ஆனால், ‘மழை மற்றும் குளிர் காலங்களில் முடியை பராமரிப்பது பெரும் பிரச்னை. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றை எளிய சிகிச்சை முறைகள் மூலம் சரிப்படுத்தலாம்’ என்கிறார் அழகுக்கலை மற்றும் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக்.

‘வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில்தான் தலைமுடி பாதிப்புகள் அதிகமாக இருக்கும். தட்பவெட்ப மாறுதல்களால் நம் சருமத்தின் மேல்புறம் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். லேசாகச் சொரிந்தால்கூட வெள்ளையாகக் கோடு படியும் அளவுக்கு சருமத்தில் வறட்சி இருக்கும். காரணம், உடலில் நீர்சத்து குறைந்து, உடல்சூடு அதிகமாக இருப்பதால்தான். வெயில் காலத்தில் உடல் நன்றாக வியர்க்கும். கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதால், வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் நச்சுக்கள் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது.

சிறுநீரும் அந்த அளவுக்கு வெளியேறாது. இதனால் நச்சுக்கள் உடலில் தங்கி, தலைமுடியின் வேர் பகுதி பாதிக்கப்படும். இதுதான் தலைமுடி உதிரும் பிரச்னையின் ஆணிவேர்’ என்கிற கீதா அசோக், அதற்கான தீர்வுகளையும் தந்தார்.

மழை மற்றும் குளிர்காலங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் விளக்கெண்ணெய்த் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் குளிப்பது நல்லது. சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்று பயப்படத் தேவையில்லை. இதனால், தலையின் மேற்புறத் தோல் வறண்டுவிடாமல் பாதுகாத்து தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

தலையில் ஸ்கால்ப் வறண்டு போய்விட்டால் அது செதில் செதிலாக ஒரு வகை உலர்ந்த பொடுகை உருவாக்கிவிடும். வறட்சியைப் போக்க 5 மி.லி. தேங்காய்ப்பாலில், 5 மி.லி. விளக்கெண்ணெய் கலந்து அதனுடன் ஐந்த முதல் 10 சொட்டு டீட்ரீ எண்ணெயையும் (கடையில் கிடைக்கும்) கலந்து ஒரு பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தடவித் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஷாம்பு போட்டு முடியை நன்றாக அலச வேண்டும்.

தினமும் இரவு படுக்கும் முன், மரத்தினால் ஆன ஒரு பெரிய பல் சீப்பினால் பத்து நிமிடம் நன்றாக மண்டையில் பதியும்படி முடியை வாரிவிட வேண்டும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகும். தலைமுடி உதிர்வதும் குறைவும்.

இரவில் 10, 15 உலர் திராட்சைகளை அரை டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீரையும் குடிக்கவும். தலைமுடிக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன், நல்ல பளபளப்பும் கிடைக்கும்.

நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய சாலட் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. வைட்டமின் சி-யில் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது.
p52

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button