ஆரோக்கியம் குறிப்புகள்

அரிசி உடம்புக்கு நல்லதா?

பாஸ்ட்புட் கடைகளில் ஃப்ரைடுரைஸ் செய்வதில் ஆரம்பித்து சாலையோர பிரியாணி, தலப்பாக்கட்டு, உருமாக் கட்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை பிரியாணி மற்றும் ஃப்ரைடுரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசி இன்று நம் வீடு வரை வந்து விட்டது. இதை உயர் வகுப்பினர் முதல் சாதாரண மக்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். விலை அதிகரிக்க அதிகரிக்க அரிசியின் நீளமும் அதிகரிக்கிறது. சில சமயம், இது அரிசியா அல்லது சேமியாவா என்று குழப்பம் வந்துவிடுகிறது.

பாஸ்மதி அரிசியின் மீது மோகம் அதிகமானதற்கு என்ன காரணம்? இந்த அரிசி சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்பு வருமா? விளக்கம் தருகிறார் உணவு கட்டுபாட்டு நிபுணர் இளவரசி.

”குழையக் குழைய சாதத்தை வடித்து, பருப்பு, நெய் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டும் வழக்கம் இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊசி ஊசியான அரிசியில் ஃப்ரைடு ரைஸ், எலுமிச்சை சாதம், புளி சாதம்தான் பெரும்பாலான பள்ளிக்குழந்தைகளின் டிபன் பாக்ஸை நிரப்பி இருக்கின்றன. திருமணங்களில்கூட, பாஸ்மதி அரிசியையே பயன்படுத்துகின்றனர். அரிசியின் நீளத்தில்தான் குடும்பத்தின் கௌரவம் உள்ளது என்று மிகவும் நீளமான அரிசியை விரும்புகிறார்கள். அதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர். இதன் விலை கிலோ 70 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரிசியின் நீளத்தைப் பொருத்து விலை மாறுகிறது. ஐ.ஆர்- 20, 30, பொன்னி, சம்பா, குருணை இதெல்லாம் இப்போது பார்க்கவே முடிவதில்லை. பொதுவாக, பாஸ்மதி அரிசியை எல்லோரும் விரும்ப காரணம் அதன் நீளம், அழகான வடிவம். மற்ற அரிசியை விட இது வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிகிறார்கள். சமைக்கறதும் ரொம்பச் சுலபமா இருக்கும். இந்த அரிசியில் பிரியாணி, ஃப்ரைடுரைஸ் போன்ற உணவுகள் செய்யும்போது, பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுற மாதிரி அழகா இருக்கும். அதனால்தான் குழந்தைகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இன்றைக்கு வீடு வரை இந்த அரிசி வந்ததற்கு காரணம் இதுதான்” என்கிற இளவரசி, அரிசியைப் பற்றி மேலும் அலசினார்.

”எல்லா அரிசியைப் போலத்தான் இதுவும். அரிசி நீளமாக வரவேண்டும் என்பதற்காக இந்த அரிசியைப் பட்டைத் தீட்டும் இயந்திரத்தில் போட்டு ரொம்ப நேரம் தீட்டுவார்கள். இதனால் அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துகள் வெளியே போய்விடுகின்றன. சாதம் குழையாமல் இருக்க அரை வேக்காட்டில் எடுத்துவிடுவார்கள். இதைச் சாப்பிடும்போது, தொண்டையில் அடைத்துக் கொள்ளலாம். வயிறு நிறையாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. இதை குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் விரும்பிக் கேட்டாலும், அரிசியை குழைய வடித்துக் கொடுப்பதே ரொம்ப நல்லது! அதுவும் முடிந்த வரை எப்போதாவது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. என்னதான் இந்த அரிசியில் சமைப்பது சுலபம் என்றாலும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கைகுத்தல் அரிசி, சிவப்பு குண்டு அரிசி போன்றவற்றுக்கு ஈடாகாது.” என்று முடித்தார்.
p54

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button