மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்தாக உள்ளது. அதுதான் குழந்தையின் உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை வழங்குகிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பாலூட்ட வேண்டும்.

முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களும், சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

பால் கசிதல்: முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் சில சமயங்களில் பால் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். திடீரென்று மார்பகத்தில் இருந்து பால் சுரந்து வெளியேற தொடங்கும். இந்த கசிவு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏற்படலாம். மூன்று முதல் ஆறு வாரங்களுக்குள் பால் கசிவு பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும். குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்கவோ அல்லது நீண்ட நேரம் கழித்து கொடுக்கவோ கூடாது.

பால் கசிவு பிரச்சினை இருந்தால் ‘நர்சிங் பேடுகளை’ பயன்படுத்தலாம். அவை ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கும், ஆடையில் பால் கசிந்து வருவதை தடுக்கவும் உதவும். பிளாஸ்டிக் பேடுகளை தவிர்க்க வேண்டும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்திற்கு எதிராக செயல்படுவதோடு மார்பு காம்புகளில் வலியை ஏற்படுத்தும். பால் கசிவதை உணர்ந்தாலோ, குழந்தைக்கு பாலூட்ட முடியாவிட்டாலோ மார்பு காம்புகளை மென்மையாக அழுத்துவது பால் கசிவை தடுக்க உதவும்.

மார்பு காம்புகளில் வலி: குழந்தைக்கு பால் கொடுக்க தொடங்கும் ஆரம்ப நாட்களில் மார்பக காம்பில் வலி ஏற்படக்கூடும். மார்பகங்களில் கடுமையான வலியையோ, அசவுகரியத்தையோ உணர்ந்தால் தாய்க்கும், சேய்க்கும் இடையேயான பிணைப்பில் குறைபாடு இருப்பதாக அர்த்தம். குழந்தை சரியாக பாலை உறிஞ்சவில்லை, சரியாக கையாளவில்லை என்பதை குறிக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது கடுமையான வலியை அனுபவித்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.

புண்: தாய்ப்பால் கொடுக்கும்போது ஊசி குத்துவது போன்ற உணர்வை சிலர் அனுபவிப்பார்கள். மார்பக காம்புகளில் புண்களும் உண்டாகக்கூடும். இந்த பிரச்சினை தற்காலிகமானது. சில வாரங்களில் சரியாகிவிடும். தொடர்ந்து காயங்கள் உண்டானாலோ, காயங்கள் ஆறாமல் இருந்தாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை வலுவாக உறிஞ்சும். தாய்ப்பால் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவும். அதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக்கூடாது. மார்பக காம்பில் புண் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று லோஷன் தடவலாம்.

மார்பக அழுத்தம்: தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் சமயத்தில் மார்பகங்கள் கனமாக இருப்பது இயல்பானது. ஆனால் தொடர்ந்து அதே அசவுகரியத்தை அனுபவித்தால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். குழந்தைக்கு நீண்ட நேரம் பால் கொடுக்கவில்லை என்றால் பால் நிரம்பிவிடும். அதன் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்கான எளிதான அணுகுமுறை, குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்டும் வழக்கத்தை பின்பற்றுவதாகும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பு மார்பகங்களை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்தும் வரலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் முறையாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் தலையை மார்பிலிருந்து 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அமர்ந்த நிலையில் இருந்து குழந்தைக்கு பாலூட்டுவது நல்லது. பாலூட்டிய உடனேயே குழந்தையை தூங்க விடாதீர்கள். பாலூட்டிய பிறகு, குழந்தையின் தலையை உங்கள் தோள்பட்டையில் சாய்ந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் வைத்திருங்கள்.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button