மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை …

மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது.

தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘க்ளைம்’ செய்து கொள்ளலாம்.

திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது.

3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளை பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும்.

மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணம் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு இருக்கும். இதில் அதிகபட்ச தொகை கிளைம் ஆவது போல பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள்.

சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் எடுத்துக்ெகாண்ட பிறகு, ரசீதுகளை சமர்ப்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே காப்பீடு எடுக்க வேண்டும்.

பணிபுரியும் அலுவலகத்தில் குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது. ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின் கவரேஜ் காலம் முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button