எடை குறைய

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1. ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3. தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4. அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.

உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5. வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7. தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8. அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் (கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்), மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள் (கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.

ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)

காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் )அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.

முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்)

மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)

மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு

இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ) காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா (காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.

படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர்.

இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.
diat

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button