ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர்கள் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்படும் இந்த நோயை குணப்படுத்த தண்ணீரே மருந்தாக பயன்படுகிறது.

வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தை நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள படி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்தநோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் ஆகியவற்றால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

வயிற்றுப் போக்கின் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவுநீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நாவறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.

வயிற்றுப் போக்கு பாதித்த குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்து விடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி மட்டும் எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்தி விட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு இருக்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை+உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.

இழந்த நீரினை பெற இது குழந்தைக்கு உதவும். வயிற்றுப் போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக்கரைசல் பாக்கெட் (ஓஆர்எஸ் பவுடர்) மருந்துக் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம் ஒரு தம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது.

வயிற்றுப் போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிக்கும் இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக் கூடாது, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடலடித்தல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

c2893977 1d2d 4d21 b040 831e5cc7928e S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button