Other News

லண்டனை கலக்கும் தமிழ்பெண்! சாதித்தது எப்படி?

Courtesy: BBC Tamil

‘லண்டன் தமிழச்சி’ என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுபி சார்ல்ஸ்.

விதவிதமான உணவு வகைகள், பிரமாண்ட லண்டன் வீதிகள், அங்குள்ள குக்கிராமங்கள், தன் வாழ்க்கை அனுபவங்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பற்றின விவரங்கள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து, இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் பல ஆயிரக்கணக்கில் குவிகின்றன.

இவரது இயல்பான தமிழ் பேச்சும், நகைச்சுவையும், அரை மணி நேர வீடியோவைக்கூட, அலுப்பு இல்லாமல் பார்க்க வைக்கிறது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

“என்னுடைய முதல் வீடியோவில், சற்றே நாகரிகமாக பேசவேண்டும் என்று மிகவும் கவனமாக இருந்தேன். பல்லை கடித்து கொண்டு, என்னுடைய வட்டாரத்தில் பேசும் தமிழ் வந்துவிடக்கூடாது என்று கவனமாக பேசியிருப்பேன். ஆனால், அது இயல்பாக இல்லை என்று எனக்கே தோன்றியது. அதனால், சரி, நாம் பேசும் பாணியிலேயே பேசி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். அதுதான், என் அடையாளமாக மாறியது”, என்று கூறுகிறார் சுபி.

2018 ஆம் ஆண்டு இவர் தனது யூட்யூப் சேனலை தொடங்கினாலும், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு இவரது வீடியோ ஒன்று வைரலானது. “பொதுவாக, எனக்கும் என் கணவருக்கும் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பலதரப்பட்ட மக்களையும், அவர்களின் கலாச்ரத்தையும் அறிந்து கொள்வதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். அப்படி ஒருமுறை, இங்கிலாந்தில் ஒரு குக்கிராமத்துக்கு பயணம் சென்றோம். அந்த அனுபவங்களை பதிவு செய்தோம்.

 

அந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வருடம் கழித்து, 2019 ஆம் ஆண்டு திடீரென வைரலானது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், கூடவே பெரும் பயமும் வந்துவிட்டது. இனி எப்படி இந்த சேனலை நடத்துவது, எப்படி நான் கண்டு ரசிக்கும் விஷயங்களை சொல்ல வேண்டும் என்று பல சிந்தனைகள். ஆனால், நான் திட்டமிட்டு வீடியோ பதிவு செய்தது மிகவும் குறைவே. இயல்பாக ஒன்றை செய்யும்போதுதான், மக்களிடம் சென்றடைக்கிறது,” என்று விவரிக்கிறார் சுபி.

‘லண்டன் தமிழச்சி’ என்ற பெயருக்கான காரணம் பற்றி பிபிசி தமிழ் கேட்க, “முதலில், சுபி கார்னர் அல்லது சுபி கிச்சன் என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால், லண்டனில் எங்கு சென்றாலும், நான் வேறு நாட்டைச் சேர்ந்தவள் என்பதை தெரிந்துக்கொள்வார்கள். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்; தமிழ் என்ற அடையாளம்தான் எனக்கு சொந்தமானது. அப்படிதான், இந்த பெயரில் யூடியூப் தொடங்கினேன்,” என்று சுபி கூறுகிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கும் இவர், அங்கு செவிலியராக பணிபுரிகிறார். இவரது கணவர் சார்ல்ஸ் ராய்ப்பன் மனநல மருத்துவராக (Psychotherapist) பணியாற்றி வருகிறார். இந்த சேனலுக்கான ஒளிப்பதிவு முதல் படத்தொகுப்பு வரை பெரும்பாலும் சார்ல்ஸின் பொறுப்பாக இருக்கும் நிலையில், சேனலுக்கு ஆணிவேர் என்று அவரை அழைக்கிறார் சுபி.

 

தன் அனுபவங்கள் குறித்து சார்ல்ஸ் பகிர்கையில், “வெளிநாடுகளின் வாழும் மக்களுக்கு, ஏதோ ஒரு வகையில் தன் நாட்டை சேர்ந்த மக்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். அப்படிதான் எங்களுக்கும் இருந்தது. எங்களுக்கு தெரிந்த விஷயங்களை பலருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும். இதற்கு முன்னர், நாங்கள் இங்கு லண்டன் விகடன் என்ற சிறு பத்திரிகை, வணக்கம் தமிழ் என்ற இணையதளம் போன்றவையும் நடத்தி வந்தோம். அதன் தற்போதைய வடிவமே இந்த யூடியூப் சேனல்,” என்று விவரிக்கிறார்.

ஆனால், கோவிட் தொடங்கிய காலம், இவர்களின் இந்த ஆர்வத்தை சோதனை செய்தது. “கடந்த 20 ஆண்டுகளாக நான் செவிலியராக பணியாற்றுகிறேன். கொரோனா தொற்று காலத்தில், பணியும் பாதுகாப்பும் முதன்மையாக இருந்தது. அதுகுறித்த வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து இருந்தேன். ஆனால், இத்தகைய நெருக்கடியில், நாம் வீடியோ பதிவிட வேண்டுமா என்ற கேள்வியும் இருந்தது. நல்ல வரவேற்பு இருந்தாலும், இந்த சேனலை நிறுத்தி விடலாம் என்றே நினைத்தேன். அப்போது என் சேனலுக்கான ரசிகர்கள்தான் என்னை இயங்க வைத்தது,” என்று கூறுகிறார் சுபி.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தன்னை மன நெகிழ வைக்கும் ரசிகர்கள் குறித்து மேலும் சுபி பேசிகையில் குரல் சற்றே தழுதழுக்கிறது. “சிங்கப்பூர், அரபு நாடுகள், மலேசியா என உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்படி ஒருமுறை அரபு நாட்டில் இருந்து எனக்கு ஒரு பெண் இமெயில் செய்திருந்தார். அதில், குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னால் ஐந்து ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்லவில்லை; என்னுடைய சேனல் பார்த்து மட்டும் இந்த சோகத்தை தான் மறப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய தருணங்களில் கிடைக்கும் மனநிறைவு ஈடுஇணை இல்லை,” என்கிறார் சுபி.

ஆனால், சமூக வலைதளங்களில் யூடியூபர்கள் குறித்து வரும் விமர்சனங்கள் எப்படி எதிர்க்கொள்கிறீர்கள் என்று கேட்டப்போது, “பொதுவெளியில் ஒன்றை நாம் செய்தும்போது பல்வேறு கருத்துகள் வருவது இயல்புதானே? ஆரோக்கியமான விமர்சனங்களை நான் எப்போதும் கருத்தில் கொள்வேன். ஆனால், நம்மை இழிவுப்படுத்த வேண்டும் என்றே வரும் கருத்துகளை கண்டுகொள்ளவே மாட்டேன். நாம் என்ன செய்தாலும், ஏதோ ஒரு கருத்து கூறுவதற்கு என்றே சிலர் இருப்பார்கள். ஆனால், நாம் உண்மையாகவும், மகிழ்ச்சியாகவும் உழைத்தால், நம்மை விரும்பும் மனிதர்கள் உலகம் எங்கும் இருப்பார்கள்,” என்று அழுத்திக் கூறுகிறார் சுபி சார்ல்ஸ்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button