கரு கருவென்ற அடர்த்தியான கூந்தல் மீது பெண்கள் பலருக்கும் ஆசை இருக்கும். நாகரிக வளர்ச்சியால் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அதற்கான வழிமுறைகளை அறிந்து அதனை செயல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அடர்ந்த கூந்தலைப் பெறமுடியும்.
வாரம் ஒரு முறை ஆமணக்கு எண்ணெய்யைத் தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி நன்றாக வளருவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின்பு சீயக்காய் அல்லது இயற்கையான முறையில் தயாரித்த ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் நான்கு இவை இரண்டையும் நன்றாக அரைத்து, ¼ கப் தயிர் கலந்து தலையில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இவ்வாறு அவ்வப்போது செய்து வந்தால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி, ஆற வைத்து, தலையில் தடவினால் கூந்தல் நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஊறவைத்து, நன்றாக அரைத்து தலையில் ‘பேக்’ போல போட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் தலைமுடி அடர்த்தியாக செழித்து வளரும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் இந்தக் கலவையை 4 நாளுக்கு ஒரு முறை வெயிலில் வைக்க வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து, வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலம், முடி அடர்த்தியாக வளரும். முடி உதிர்தல் குறையும்.
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்களை தலா 10 கிராம் எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். அதை காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். பின்பு இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி உதிர்வது குறைவதுடன், கூந்தல் அடர்த்தியாக வளரும்.Courtesy: MaalaiMalar