மருத்துவ குறிப்பு

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் வழிகள்!

போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது.
நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்.
மல்ட்டி டாஸ்க்கிங்:
இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது, உங்கள் போன் புராசசர் வேகம் குறையும். போனின் வெப்பம் அதிகரிக்கும். அதுவும் உங்கள் போனில் இருப்பது குறைந்த திறனுள்ள ரேம் என்றால், இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லது. பல நேரங்களில் ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும். எனவே அதனைத் தவிர்க்க முடியாது என்றாலும், நேரத்தைக் குறைப்பதன் மூலம் போன் வெப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

13

சார்ஜிங்:
உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகே. சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கம். இந்த ஓவர் சார்ஜிங்கும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
போன் கவர்:
புது போன் வாங்கியதுமே, ஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதே! அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.
மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜர்:
ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்கி மாட்டாதீர்கள். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும்.
மொபைல் சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும். உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் போனின் வெப்பத்திற்கு காரணம். USB கேபிளுக்கும் இது பொருந்தும்.
சுற்றுப்புற வெப்பநிலை:
உங்கள் மொபைல் ஏ.சி அறையில் இருக்கும் போது இருந்த வெப்பநிலைக்கும், வெளியே இருக்கும் போது இருக்கும் வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். நமது சுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்க வேண்டாம்.
வேண்டாத ஆப்ஸ்:
சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ், மெமரி, வைஃபை, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும். இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான். எனவே ரேம் குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போட்டு விடுங்கள்.
வைஃபை, இணையம், ப்ளூடூத்:

14

 


அதிக நேரம் வைஃபை மூலம் அல்லது மொபைல் டேட்டா மூலம் டவுன்லோட் செய்வது போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு டவுன்லோட் செய்யலாம். ப்ளூடூத் நீண்ட நேரம் ஆன்-ல் இருப்பதையும் தவிருங்கள்!
இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, மொபைல் டிஸ்ப்ளே ஒளி அளவை அதிகம் வைப்பது, பேக்கிரவுண்ட் ஆப்ஸ் பயன்பாடுகள் போன்ற விஷயங்கள் அனைத்தும் மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது. எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button