தலைமுடி சிகிச்சை

வழுக்கை விழுகிறதா? – இதோ சில யோசனைகள்

ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது.

மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது பார்ப்பவர்களின் மனத்தளவில் ஏற்படும் ஒரு தேவையற்ற உணர்வே.

இன்றைய தலைமுறையினர் தங்களது தோற்றத்தில் அதீத கவனம் செலுத்துவதால், வழுக்கை ஏன் விழுகிறது என்பதற்கு விளக்கமும், தீர்வும் தேடி அலைகின்றனர். ஒரு தோல் நோய் மருத்துவ நிபுணர் இதற்கு உதவிகரமாக இருப்பார்.

ஆண்களுக்கு விழும் வழுக்கைக்குப் பிரதான காரணம் டெஸ்டஸ்டரோன் என்ற ஹார்மோன்.

இந்த ஹார்மோன்களுக்கு தலைமுடியின் எதிர்வினை மரபுக் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. வழுக்கை மரபுக் கூறுகள் உங்களிடம் இருந்தால் பிரச்சனை வலுவடைகிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால் உங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

விடலைப் பருவம் வந்தவுடனேயே ஆண் ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றன. டெஸ்டஸ்டரோன் ஹார்மோனுக்கு வினையாற்றும் விதமாக மரபுக் கூறுகளால் நிர்ணயிக்கப்பட்ட இது தலை முடியை பாதிக்கிறது.

விடலைப் பருவத்திலேயே தொடங்கும் முடி உதிர்தல், பின்புதான் நமக்கு கண்ணுக்கு தெரிய வருகிறது. உங்கள் முடி அடர்த்தி, முடி உதிரும் வேகம் ஆகியவைகளால் இது தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு தினத்தில் 50-70 முடி உதிர்தல் என்பது நார்மலானது. முடி மெலிதாவதும் நமக்கு தெரிய வருகிறது.

முதலில் நெற்றிப் பகுதியில் ஏறுதலும் பின்பு பக்கவாட்டில் முடி ஏறுதலும் நிகழ்கிறது. இதற்கு அடுத்தக் கட்டமாக நடு மண்டையில் முடி மெலிதாகிறது. நெற்றி முன்பக்க, பக்கவாட்டு முடி ஏறி நடு மண்டையின் வழுக்கையுடன் தொடர்பு ஏற்படும் போது முழு வழுக்கை விழுகிறது.

இறுதியில் பக்கவாட்டு பகுதியிலும், பின் மண்டையிலும் சொற்ப முடிகளே எஞ்சுகிறது. 25-35 வயதிலேயே சிலருக்கு வழுக்கைப் பிரச்சனை தோன்றி விடுகிறது.

வழுக்கையும் – பிற வகை முடி உதிர்தலும்:

முடி இழத்தல் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். குறிப்பாக கவலை, நீண்ட நாளைய நோய், மற்றும் ஊட்டச் சத்தில்லாத உணவு முறை ஆகியவை பொதுவான காரணங்களாகும். இந்தக் காரணங்கள் ஏற்பட்டு 10 வாரங்களில் முடி இழப்பு ஏற்படுகிறது.

1447428628 5367

தற்போதைய ஹை-டெக் கார்ப்பரேட் வேலையில் உள்ளவர்கள் இரவு நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்கிறார்கள். இதுவே வழுக்கைக்கு ஒரு காணரம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் டைஃபாய்டு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கும் முடி இழப்பு துரிதமடைகிறது. சில வேளைகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகும், 2 மாதங்களுக்கு முன்னால் இருந்த விரதம் ஆகியவை கூட தற்போதைய முடி இழப்பிற்கு காரணமாகலாம்.

ஆனால் மேற்சொன்னவைகளால் விழும் வழுக்கை, முன் நெற்றி, பக்கவாட்டு முடி ஏறி விழும் வழுக்கை போல் அல்ல. மேற்சொன்ன முடி இழப்புகளை ஊட்டச்சத்து உணவுகளால் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட முடியும்.

தற்போது இளவயது வழுக்கை குறித்து பெருங்கவலை ஏற்பட்டுள்ளது. தற்போது இதற்கும் பல தீர்வுகள் கிடைத்துள்ளன.

உங்கள் தோல் நோய் மருத்துவரை அணுகி உங்கள் முடி மற்றும் முடி வேர்கள் பற்றிய நிலவரத்தை அவ்வப்போது அறிவது நலம்.

மினாக்சிடில் என்ற ஒரு லோஷனை மருத்துவர் முதலில் தொடங்குவார். அல்லது கவரிட் என்ற மருந்து மூலம் சிகிச்சை தொடங்கப்படலாம்.

மினாக்சிடிலுடன், ட்ரைகெய்ன் லிக்விட் சேர்ந்த லோஷனும் உள்ளது. இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மிகத் துல்லியமாக ஒரு மில்லி லிட்டர் எடுத்து மண்டை தோலில் ஒரு நாளுக்கு இரு முறை தடவ வேண்டும்.

சிகிச்சையில் இருக்கும்போது எண்ணெய் தடவுதல் கூடாது. ஏனெனில் மருந்து உறிஞ்சப்படாமலேயே போய்விடும். இம்மருந்துகளால் 6 வாரங்களில் பலன் தெரியவரும். ஆனால் நீண்ட நாளைக்கு இந்த சிகிச்சை தேவைப்படும்.

ஃபினாஸ்டிரைடு என்ற வாய்வழி மருந்தும் உள்ளது. ஆனால் இது தீவிர மருத்துவக் கண்காணிப்பிலேயே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளாண்டேஷன் என்ற முடி மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. இது அதிக செலவுமிக்கது. இதற்கு ௫.1 முதல் 1.5 லட்சம் வரை செலவாகும். அல்லது ௫.7,000 – ௫.15,000 வரை செலவாகும் ஒரு சிகிச்சை முறை உள்ளது.

அதாவது ஹேர்வீவ் என்ற முடி தைத்தல் சிகிச்சை, உங்கள் முடியின் தன்மைக்கேற்ற செயற்கை முடியை வழுக்கை விழுந்த இடத்தில் வைத்து தைத்துக் கொள்ளலாம். இது இயற்கை முடி போலவே காட்சியளிக்கும்.

என்ன செலவானாலும் வழுக்கை தற்போது ஒரு மிகப்பெரிய பிரச்சனையல்ல, எனினும் உணவு முறை, கவலைப்படாமல் இருத்தல், நல்ல தூக்கம் இதோடு உங்கள் முடி ஆரோக்யத்தை அவ்வவ்போது பரிசோதனை செய்ய சரும நோய் நிபுணரை அணுகுதல் போன்றவற்றால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button