பித்தப்பை கற்களுக்குத் தீர்வு

நிறைய பேர் பித்தப்பை கல் பிரச்சனை ஏற்பட்டு, சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால், எந்த பலனும் அளிக்காமல் இறுதியாக தான் மருத்துவப் பரிசோதனைக்கு செல்கிறார்கள்.

மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10 பேருக்கே மருந்து குணமளிக்கிறது. தற்போது, லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது.

பித்தப்பை என்றால் என்ன?

பித்தப்பை என்பது பேரிக்காய் வடிவத்தில் நமது உடலில் கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். அவை 7 முதல் 12 செ.மீ நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும்.

இந்த பித்தப்பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை சுருங்குகிறது. அவ்வாறு பித்தப்பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப்பையில் சுரக்கும் நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

பித்தப்பையில் கற்கள் உருவாக காரணம்:

பல்வேறு காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம். பித்தபைக்கற்கள் மூன்று வகைப்படும்.

ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன. பொதுவாக உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்தநீர்ப்பையில் பாக்டீரியா அலலது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன.

நோயின் அறிகுறிகள்:

பித்தப்பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு வாயுத்தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது. மஞ்சள் காமாலை நோய் தாக்குகிறது. கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இவை பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது.

நோயை கண்டறிந்து குணபடுத்துவது:

பித்தப்பை கற்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப்பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலுல், 100ல் 10 பேருக்கு மருந்து குணமளிக்கிறது.

அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சனை துவங்கிவிடும். மேலும், மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

எனவே பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும். அறுவை சிகிச்சை என்றால், வயிற்றை கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் லேப்ரோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply