30.8 C
Chennai
Sunday, May 11, 2025
ld3904
மருத்துவ குறிப்பு

இப்போது இளம் பெண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்!

‘டீன் ஏஜ் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய்’ – சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த செய்தி வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்தது. நடுத்தர வயதுகளில் வந்து கொண்டிருந்த மார்பகப் புற்றுநோய், 30 ப்ளஸ் பெண்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று புற்றுநோய் மருத்துவரான ராமனாதனிடம் கேட்டோம்.

”நானும் அந்த செய்தியைப் பார்த்தேன். டீன் ஏஜ் மார்பகப் புற்றுநோய் என்பது மிக மிக அரிதாக வருகிற பிரச்னை. அதனால், இதைப் பார்த்து எல்லோரும் பயம் கொள்ள வேண்டியதில்லை. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும்” என்றவரிடம், 50 வயதிலிருந்து 20 என இந்த வரம்பு குறைந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டோம். ”முன்பு பெண்கள் பருவம் அடைகிற வயது 15க்கு மேலாக இருந்தது. பருவம் அடைந்த சில வருடங்களிலேயே திருமணமும் முடித்துவிடுவார்கள். உடனடியாகக் குழந்தையும் பெற்றுக் கொள்வார்கள்.

இதனால் பருவம் அடைந்த பிறகு அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், கர்ப்ப காலத்தின்போது கொஞ்சம் கட்டுப்படும். குழந்தைப் பிறப்புக்குப் பின்னும் சில மாதங்களுக்கு பெண் ஹார்மோன்களின் அளவு குறைந்திருக்கும். இயல்பாக நடக்கிற இந்த மாற்றங்களால் அதிக ஹார்மோன் சுரப்பிலிருந்து பெண்களின் உடலுக்கு சிறிய இடைவெளி கிடைக்கும். இப்போதோ 10 வயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். பருவம் அடைந்த வயதுக்கும் திருமணமாகும் வயதுக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டாகிறது. இந்த இரண்டு காரணங்களால் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படாமல் போகிறது. இதுதான் மார்பகப் புற்றுநோயாக எதிரொலிக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைந்து

வருவதும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். குழந்தைப் பருவத்திலேயே பருவம் அடைதல், தாய்மையடையும் காலம் தள்ளிப்போவது, தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது ஆகிய 3 பிரச்னைகளை சரி செய்தாலே மார்பகப் புற்றுநோயிலிருந்து பெரும்பாலும் தப்பிக்க முடியும்.

மாதம் ஒருமுறை பெண்கள் தாங்களே மார்பகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேமோகிராம் பரிசோதனையை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம். மார்பகப் பரிசோதனையை மகப்பேறு மருத்துவரிடம் பெண்கள் செய்துகொள்கிறார்கள். மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது இன்னும் சரியானதாக இருக்கும்” என்கிறார் ராமனாதன்.பயம் வேண்டாம்!

டீன் ஏஜ் மார்பகப் புற்றுநோய் வருவது மிகமிக அரிதானது என்றே ரேடியாலஜிஸ்ட்டான ரூபா ரங்கநாதனும் சொல்கிறார். ”இளம் வயதில் ஏற்படும் கட்டிகள் பெரும்பாலும் நீர்க்கட்டிகளாகவோ ஃபைப்ராய்ட் கட்டிகளாகவோ இருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். அதனால், 20 வயதுக்கும் கீழ் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவானதே. கட்டிகள் இருந்தாலும் பதற்றம் வேண்டியதில்லை.

சந்தேகம் தீர்த்துக் கொள்ள பரிசோதனை செய்துகொண்டால் போதும். அது என்ன வகையான கட்டி என்பதை மருத்துவர்தான் உறுதிப்படுத்த வேண்டுமே தவிர, நாமே முடிவு செய்து கொள்ளக் கூடாது. கட்டிகள் ஏற்படுவது எத்தனை இளம் வயதாக இருந்தாலும் பரிசோதனை செய்து சரிபார்த்துக் கொள்வதைத் தள்ளிப் போடக் கூடாது என்பதும் முக்கியம்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிட முடியும். மார்பகத்தில் கட்டி தெரிந்தாலோ, தடித்துப் போயிருந்தாலோ, காம்பில் நீர் வடிந்தாலோ தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அக்குளில் கட்டி இருந்தாலும் பரிசோதனை அவசியம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம். 30களில் ஏற்படும் இளம்வயது மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் இப்போது அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

மார்பகப் புற்றுநோய் வருவதற்கு மரபியல் ரீதியாக 20 சதவிகிதமே காரணங்கள் இருக்கின்றன. மீதி உள்ள 80 சதவிகித காரணிகளை வெளிப்புற சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், பருமன், மதுப்பழக்கம் போன்றவை பெரிய அளவில் மாறுதல் அடைந்திருப்பதும் காரணமாக இருக்கலாம். இந்திய இளம்பெண்களுக்கு ஏன் மார்பகப் புற்றுநோய் அதிகம் வருகிறது என்பதைப் பற்றிய ஆய்வுகள் நடக்க வேண்டும்.

அப்போதுதான் சரியான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். மேற்கத்திய நாடுகளில் மார்பகப் புற்றுநோய் வருகிற 8 பேரில் 7 பேர் காப்பாற்றப்படுகிறார்கள். இந்தியாவிலோ போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பலரைக் காப்பாற்ற முடிவதில்லை. இதனால்தான் கட்டி முற்றிய நிலையில் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்!”

ld3904

Related posts

இரும்பு சத்து உள்ள உணவுகள்

nathan

ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!

nathan

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் இந்த அற்புத பொருள்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு??

nathan

பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் 1 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உஷாரா இருங்க…

nathan

குழந்தைகளின் முன்னே பெற்றோர் செய்யக் கூடாத விஷயங்கள்!!

nathan

ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளுக்கு காரணம்

nathan