கர்ப்பிணி பெண்களுக்கு

சிசேரியன் எப்படி தவிர்க்கலாம்?

என் மகளுக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?

ஏன் அதிகரித்துள்ளது சிசேரியன்?

“தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”

எப்போது சிசேரியன் அவசியம்?

“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”

எப்போது கவனமாக இருக்க வேண்டும்?

“கர்ப்ப காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”

சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?

“கர்ப்ப காலங்களில் ஐந்து முறையேனும் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்தல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால (Trimester) இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும் போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்தல் அவசியம்.

1. 36-வது வாரத்துக்கு மேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2.இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.

எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கர்ப்ப கால யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நடப்பதும் நல்லது. சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்பதால், இதை காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது.”

01 mother and child

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button