ஆரோக்கிய உணவு

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

இன்று பலர் காலை வேளை உணவை தவிர்ப்பதை வழக்கமாக்கியுள்ளனர். முந்தைய இரவை சரியாக திட்டமிடாததே காரணம். முந்தைய இரவு உணவை, 8:00 மணிக்குள் முடிக்க வேண்டும். அந்த உணவும் எளிதான, நார்ச்சத்து மிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

இரவில் உணவு எளிதில் ஜீரணிக்க, இந்த உணவு பழக்கம் உதவும். இதனால் காலைக்கடன் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. பலர் காலை உணவை தவிர்ப்பதே, காலைக்கடன் கழிப்பதில் திருப்தி கிடைக்காததுதான். நேரம் கிடைக்காதது மற்றொரு முக்கிய காரணம். இரவு உணவு, உறக்கம் ஆகியவற்றை முறையாக திட்டமிட்டுக் கொண்டால், காலை உணவையும் முறையாக, திட்டமிட்டு எடுத்துக் கொள்ள முடியும்.

இரவில் முறையான திட்டமிடல் இருந்தாலும், சிலர் காலை உணவை தவிர்க்கின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் பலர், காலை உணவை தவிர்ப்பதை ஸ்டைல், உடல் வளர்க்க உதவும் என தவறாக எண்ணுகின்றனர். நோய் வளர்க்கவே இந்த பழக்கம் உதவுகிறது என்பதை, பின்னரே இவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

இரவு உணவு செரித்த பின், காலை உணவுக்காக ஏங்கும் உறுப்புகளுக்கு, எவ்வித சாப்பாடும் அளிக்காததால், பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றன உள்ளுறுப்புகள். காலை நேரத்தில், சரிவிகித உணவு சாப்பிட்டால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம். மூளையும்
ஆரோக்கியமாக இயங்கும். குறிப்பாக, சிலவகை உணவுகளை அடிக்கடி, காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. முழு தானிய உணவுகள், பாலாடைக்கட்டி, ஆப்பிள், தக்காளி துண்டுகள், கோதுமை சப்பாத்தி, காய்கறி அவியல், கோதுமை ரவை, பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.
பழங்களில், விட்டமின் சி சத்துகள் நிரம்பிய, பழங்களை சாப்பிட தேர்வு செய்யலாம். ஏனெனில், விட்டமின் சி யில் தான், வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து, மூளைக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும், காலையில் சாப்பிடவில்லை என்றால் கூட பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை, அவசியம் சாப்பிடவும். இதில், விட்டமின் சி தாராளமாக இருக்கிறது. இட்லி, தோசை, சம்பா ரவை, சோள வறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம், விட்டமின் சி கிடைக்கும்.

மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே, மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி, ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும், மூளையைத் துடிப்புடன் செயல்பட வைக்கின்றன. அன்னாசி பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகளை சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச்சாறுடன், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவதே. பழச்சாறு சாப்பிட்டால், பாலாடைக்கட்டியை சேர்த்து சாப்பிடலாம்.

முழுதானிய உணவு வகைகளில், இட்லியும் இடம்பெறும். இதனால் தான், பெரும்பாலானோர் காலை நேரத்துக்கு, இட்லியை ஏற்ற உணவாக தேர்வு செய்கின்றனர். இது, மூளையை சோர்ந்து போக விடாமல், சுறுசுறுப்பாக இயக்குகிறது. காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டாலே, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
E 1453019471

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button