மருத்துவ குறிப்பு

முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

மாதவிலக்கு சுழற்சி என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 28 முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காவதுதான் சரியான சுழற்சி என்றாலும், சிலருக்கு அந்த சுழற்சி சில மாத இடைவெளி விட்டுக் கூட வரலாம். ”திருமணமாகிற வரை இந்த முறையற்ற மாதவிலக்கு சுழற்சி பெண்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. திருமணமாகி, கருத்தரித்த பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களையும் தெளிவாக்குகிறார் அவர்.

”பிரசவ தேதியைக் கணக்கிட கடைசி மாதவிலக்கு தேதியானது அவசியம். கடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.

28 நாட்கள் முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காகிற பெண்களுக்கு இந்தக் கணக்கு சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கு தப்பாகலாம். எனவே மாதவிலக்கு முறையற்று இருந்து கருத்தரித்த பெண்கள், சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்தவுடனேயே, 45 நாட்களில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த ஸ்கேனில் கருவானது, கர்ப்பப் பைக்குள்தான் வளர்கிறதா அல்லது வெளியில் வளர்கிறதா என்பது தெரியும். அந்த ஸ்கேனை குழந்தையின் இதயத் துடிப்பு வருவதற்கு முன் செய்வதன் மூலம், கருவின் வளர்ச்சியைக் கணித்து, பிரசவ தேதியைக் கணக்கிட முடியும்.

கருத்தரித்த பெண்கள் பலரும் அத்தனை சீக்கிரம் செய்யப்படுகிற ஸ்கேன் அவசியம்தானா என நினைக்கலாம். எத்தனை சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை சீக்கிரத்தில் கரு தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருந்தால் கண்டுபிடித்து சரி செய்ய ஏதுவாக இருக்கும். குறிப்பாக ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு ஒரு குழந்தை கருக்குழாயிலும், இன்னொன்று கர்ப்பப் பையிலும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த ஸ்கேன் மிக மிக அவசியம்.குழந்தையின் இதயத் துடிப்பானது பொதுவாக 6 வாரங்களில் ஆரம்பமாகும். திறமைமிக்க ஒரு சோனாலஜிஸ்ட் (ஸ்கேன் நிபுணர்) அதை வைத்தே கருவின் வளர்ச்சியைக் கணித்து விடுவார்.

பொதுவாக கர்ப்ப காலம் 280 நாட்கள். சரியான பிரசவ தேதி தெரியாமல், இந்த நாட்கள் கடக்கும் போதும் பிரச்னைதான். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குழந்தையின் நஞ்சுக் கொடி செயல்படாது. குழந்தைக்கும், தாய்க்குமான தொடர்பே அந்த நஞ்சுக் கொடிதான். அது முதிர்ந்து, செயல்பாட்டை நிறுத்தினாலும் ஆபத்துதான். எனவே மாதவிலக்கு முறையற்ற பெண்கள், கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நொடி முதல், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற எந்த ஸ்கேனையும் அநாவசியம் என அலட்சியப்படுத்த வேண்டாம்…” என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

1336314749menstrual problems

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button