ஆரோக்கியம் குறிப்புகள்

வைட்டமின் சி தரும் ஆரோக்கிய நலன்

உடலுக்கு சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவு, மிக அவசியம் என்பது டாக்டர்கள் சொல்லும் ஆரோக்கிய அறிவுரை. சரிவிகித ஊட்டச் சத்து என்றால், எவ்வளவு என்பதில்தான் பலருக்கும் சந்தேகம். குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் சேர்ந்ததுதான் சரிவிகித ஊட்டச் சத்து. எல்லாச் சத்துக்களுமே முக்கியமானவை என்றாலும், உடல் செல்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.

வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின். ‘வைட்டமின் டி’-யைப்போல் இதை நம் உடல், உற்பத்தி செய்வதில்லை. நீரில் கரையக்கூடியது என்பதால், சேமித்து வைக்கவும் முடியாது. எனவே, பெரியவர்கள் தினசரி 60 மி.கி. அளவுக்கு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதுதவிர, வேறு எந்தெந்த உணவுப் பொருள்களில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது என்பது பற்றி காரைக்குடியைச் சேர்ந்த டயட்டீஷியன் செல்வராணியிடம் கேட்டோம்.

‘நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின்- சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன்தான் லிகமென்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது. மேலும், நம் சருமம் மற்றும் இதர உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது, மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ‘ என்றவர், இதர காய்கறி – பழங்களில் வைட்டமின் சி எவ்வளவு உள்ளது என்று பட்டியலிட்டார்.

ஆரஞ்சு

100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மி.கி. அளவில் வைட்டமின் சி உள்ளது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவடையும். வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் ஆரஞ்சு முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா- கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும், கலோரி அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சுப் பழத்தின் வாசமே மனநிலையை சந்தோஷமாக மாற்றும்.

பப்பாளி

விலை மலிவானதும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியதுமான பப்பாளியில் வைட்டமின் ஏ சத்துடன், வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 60 மி.கி. வைட்டமின் சி இருக்கிறது. நாள் ஒன்றுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி, 100 கிராம் பழத்திலேயே கிடைத்துவிடும். இதுதவிர பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் அதிகம் உள்ளன.

கொய்யா

கொய்யாப் பழ ரகத்துக்கு ஏற்றபடி அதிகபட்சமாக 228 மி.கி. வரையில் வைட்டமின் சி உள்ளது. இது செல்களைப் பாதுகாத்து, புற்றுநோய் செல் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன், இதர செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றலை, செல்களுக்கு அளிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வைட்டமின் சி தவிர்த்து இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க இது பெரிதும் உதவும்.

குடமிளகாய்

இதில், வைட்டமின் சி இருக்கிறது. இதுதவிர, குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும் காக்கும். சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும். மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
23 1435038502 2 citrus fruit orange lemon

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button