கர்ப்பிணி பெண்களுக்கு

குறைவான எடையும் கருத்தரிப்பை பாதிக்கும்

அதிக எடை ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சராசரியை விடக் குறைவான எடையும் ஆபத்தானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் குறிப்பாக அதிக எடையைப் போலவே, குறைவான எடையும் பெண்களின் கருத்தரிப்பைப் பாதிக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

உடல் எடைக்கும், கருத்தரிப்புக்குமான தொடர்பைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

”அதிக உடல் எடை காரணமா உயர் ரத்த அழுத்தம், ஹைப்பர் டென்ஷன், இதய நோய்கள் எல்லாம் வரும். குழந்தையில்லாததுக்கும் ஆண், பெண் ரெண்டு பேரோட அதிக உடல் எடை முக்கியமான காரணம்னு நிரூபிக்கப்பட்டிருக்கு. வருடக் கணக்கா குழந்தையில்லாத தம்பதிகள், உடல் எடையைக் குறைச்சதும், கரு தங்கி, குழந்தை பிறக்குது. உடல் எடை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள பெண்கள்ல 70 சதவிகிதம் பேருக்கு மாதவிலக்கு சுழற்சி முறை தவறி இருக்கு.

இப்பல்லாம் குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வர்ற பெண்களுக்கு முதல் விசிட்லயே தவறாம எடை சோதிக்கப்படுது. பொதுவா பெண்களோட உடம்புல டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் ஹார்மோனும், ஈஸ்ட்ரைடையால் என்ற பெண் ஹார்மோனும் இருக்கும். இந்த ரெண்டும் கொழுப்பு செல்கள்லதான் கரையும். ஒருத்தரோட உடம்புல கொழுப்பு செல்கள் அதிகமானா, இந்த ரெண்டு ஹார்மோன்களும் அதுல போய் உட்கார்ந்துக்கும். அப்படியே மெல்ல மெல்ல அது ரத்தத்துல கலக்கும்.

கொழுப்பு செல்கள், பலவீனமான ஒரு ஆண் ஹார்மோனை, பலவீனமான பெண் ஹார்மோனா மாத்தும். இந்தச் செயல் மூளையோட பிட்யூட்டரி சுரப்பியை பாதிக்கும். மூளையிலேருந்து சினைப்பைக்கு சிக்னல் சரியா கிடைக்காது. முட்டை உற்பத்தி பாதிக்கும். அதனால கருத்தரிப்புல பிரச்னை வரும். குழப்பமான இந்த நெட்வொர்க்கை முறைப்படுத்தணும்னா, கொழுப்பைக் குறைச்சு, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்.

சராசரியைவிடக் குறைவான உடல் எடை உள்ளவங்களுக்கும் ஹார்மோன் சரியா வேலை செய்யாது. இவங்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கம்மியா இருக்கும். கொழுப்பு செல்களும் குறைவா இருக்கும். மூளையிலேருந்து சினைப்பைக்கு சிக்னல் சரியா கிடைக்காததால, இவங்களுக்கும் கருத்தரிக்கிறதுல சிக்கல் வரும்.சராசரி வயதை விட சீக்கிரமே பெண்கள் பூப்பெய்தவும் உடம்புல உள்ள அதிக கொழுப்புதான் காரணம். குண்டா இருந்தாலும், பூப்பெய்தின புதுசுல மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கலாம்.

போகப்போக அது முறை தவறும். காரணம் கொழுப்பு. இது ஒரு பக்கம்னா, விளையாட்டுத் துறையில உள்ள சில பெண்கள் ரொம்ப ஒல்லியான உடல் வாகோட இருப்பாங்க. அவங்களுக்கு ஈஸ்ட்ரைடையால் ஹார்மோன் குறைவா இருந்து, பருவமடையறதே தாமதமாகும். அந்த மாதிரிப் பெண்களை உடல் எடையைக் கொஞ்சமாவது அதிகரிக்கச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
உடல் எடையைக் குறைக்கிறதும், கூட்டறதும் சவாலான விஷயங்கள்.

இதுக்கு மருந்து, மாத்திரைகள் பலன் தராது. எடைக் குறைப்பையோ, அதிகரிப்பையோ ஒரு லட்சியமா வச்சுக்கிட்டு, தன்னம்பிக்கையோட அதுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது நிச்சயம் பலன் தரும். குறிப்பா எடைக் குறைக்க நினைக்கிறவங்க உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தன்னம்பிக்கையோட உதவியோட நிச்சயம் இலக்கை அடையலாம்…” என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

ht2295

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button