மருத்துவ குறிப்பு

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

ஊர்த் திருவிழா, வீட்டு விசேஷங்கள், தாம்பூலத் தட்டுக்களில் தவறாது இடம்பிடிக்கும் மூத்தோர்கள் மொழிந்த முக்கனிகளுள் மூன்றாவது கனி- வாழை. பூவன், ஏலக்கி, செவ்வாழை, நேந்திரம் என்று வாழைகளில் பல வகைகள் இருந்தாலும், மலைக்கவைக்கும் மருத்துவ குணங்கள் மலைவாழைப்பழத்தில்தான் அதிகம் இருக்கின்றன. அதன் குணங்களைப் பற்றிக் கூறுகிறார், மதுரை சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

‘மலைவாழைப்பழத்தில் சிறுமலைப் பழம், பெரு மலைப் பழம் என்று இரண்டு வகைகள் உண்டு. பெரு மலை வாழைப்பழம், உடலுக்கு அதிக சூட்டைத் தருவதால், அதை, குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள்.

‘செரட்டோனின்’ என்னும் ஹார்மோன், நமக்கு மகிழ்ச்சியான உணர்வை தருகிறது. மேலும், செல்களின் அழிவைத் தடுத்து நம் உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். மலைவாழைப்பழத்தில் இது இயற்கையாகவே இருப்பதால், புத்துணர்வு கொடுக்கிறது.

தென் தமிழகத்தில் மட்டுமே கிடைப்பதால், இந்தப் பழ வகைக்கு, மார்க்கெட்டில் பெரும் தட்டுப்பாடு இருக்கிறது. சாதாரண வாழைப்பழங்களைக் காட்டிலும் மலை வாழைப்பழம் சற்று விலை அதிகமானாலும், ஆரோக்கியம் காப்பதில் அருமருந்து!’ என்கிற மருத்துவர் ஜெய வெங்கடேஷ்,

மலை வாழைப்பழத்தின் மகிமையை விளக்கினார்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வரும்போது ஒரு மலை வாழைப்பழம் கொடுத்தால், உடனே சரியாகும்.

க‌ர்ப்பிணிகளுக்கு ஆறு, ஏழு மாதங்களில் வரும் மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு.

பிரசவத்துக்குப் பின், தாய்ப்பால் சுரப்பதற்கு உண்டான சத்துக்களை அளிக்கிறது.

நீர்ச் சத்து இல்லாதவர்கள், தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்தப் பழத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் உடம்பில் உள்ள நீர்ச் சத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

சர்க்கரைச் சத்து இதில் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.

மலைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், மந்தத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.

ரத்தசோகையைப் போக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

மலைவாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்து டயட்டீஷியன் முருகேஸ்வரியிடம் கேட்டோம்.

”நூறு கிராம் மலைப்பழத்தில் 80 கலோரிகளே இருப்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம். மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மலக்குடலில் வரும் புற்று நோயைத் தடுப்பதில் மலைவாழைப்பழத்துக்குப் பெரும்பங்கு உண்டு. நாம் உண்ணும் உணவுகளை அதிவேகமாக ஜீரணிக்கும் தன்மை மலைவாழைப்பழத்தில் இருப்பதால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும். ஃப்ரக்டோஸ், லாக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள் அதிகம் இருப்பதால், ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை, தாராளமாகச் சாப்பிடலாம். சோடியம் அதிகம் இருப்பதால், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மலைவாழைப்பழத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button