மருத்துவ குறிப்பு

குடி  முதல் கேன்சர்  வரை

அமைதி அரக்கன் போல செயல்படும் இந்நோய், நன்றாகப் பரவி, குணப்படுத்த முடியாத நிலை வரும்போது மட்டுமே வெளியே தெரியும். இந்த விஷயத்தில் எப்போதும் கவனம் தேவை என்பதோடு, சீரான இடைவெளிகளில் பரிசோதனையும் அவசியம். ஒருவேளைமுன்கூட்டியே அறிய முடிந்தால், முழுமையாகக் குணப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்லீரலில் எப்படி கேன்சர்?

இரு வழிகளில் கல்லீரலை கேன்சர் தாக்குகிறது. கல்லீரலிலேயே தோன்றும் கேன்சரை ‘பிரைமரி லிவர் கேன்சர்’ என்கிறோம். வேறொரு இடத்தில் கேன்சர் கட்டி தோன்றி, கல்லீரலுக்கும் பரவுவது இன்னொரு வகை. இதை செகண்டரி அல்லது மெட்டாஸ்டேட்டிக் கேன்சர் என்கிறோம்.

பிரைமரி லிவர் கேன்சர்

கல்லீரல் செல்களில் அல்லது கல்லீரல் குழாய்களிலோ கேன்சர் ஏற்படக்கூடும். இந்த வகை கேன்சரால் பாதிக்கப்படுவோரில் பலருக்கு ஏற்கனவே தீவிர ஹெபடைடிஸ், சிரோசிஸ் போன்றவை இருந்திருக்கக்கூடும். சிரோசிஸ் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் குடிதான் எனச் சொல்லத் தேவையில்லை. வளர்ச்சியடையாத நாடுகளில் சில தாவரங்களில் உள்ள விஷம் (Aflatoxins) காரணமாக லிவர் கேன்சர் ஏற்படுகிறது. இந்தியாவில் அந்தப் பிரச்னை அறியப்படவில்லை. ஹெபடைடிஸ் பி தாக்குதலுக்கு எதிராக எடுத்துக்கொள்ளும் தடுப்பூசி மூலமாக, பிரைமரி லிவர் கேன்சர் ஏற்படுவதைத் தடுக்க வாய்ப்பு இருக்கிறது.

அறிகுறிகள்

தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, எந்த புதிய அறிகுறியையும் காட்டாமலே, கல்லீரல் கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகம். அசெளகரியம், மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி, மஞ்சள் காமாலை, எடை இழப்பு மற்றும் சோர்வு ஆகியவை பிரைமரி லிவர் கேன்சரின் பொதுவான அறிகுறிகள்.

எப்படி உறுதிப்படுத்துவது?

பொதுவாக ரத்தப் பரிசோதனைகள் மூலம் பிரைமரி லிவர் கேன்சர் ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (Liver Function Tests), ஆல்பா – ஃபெட்டோபுரோட்டீன் எனும் ட்யூமர் மார்க்கர் சோதனையும் மேற்கொள்ளப்படும். அல்ட்ராசவுண்ட் சோதனை மூலமாகவும் அறிய முடியும் என்றாலும், சிடி ஸ்கேன் செய்வதன் மூலமாக அதிக தகவல்களைப் பெற முடியும். அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டிருந்தால், கட்டியை பயாப்சி செய்வது தவிர்க்கப்படும். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை (டிரான்ஸ்பிளான்ட்) மட்டுமே ஒரே தீர்வாக இருப்பின், இந்த முடிவு எடுக்கப்படும். டிரான்ஸ்பிளான்ட் தவிர, இதற்கான சிகிச்சை முறைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட காலம் வரை கேன்சரை கட்டுக்குள் வைக்கவே உதவுகின்றன. நிரந்தரத் தீர்வு அளிப்பதில்லை.

சிகிச்சை என்ன?

குறைந்த அளவு கேன்சர் கட்டி உடைய – மற்ற விதங்களில் ஆரோக்கியமாக உள்ள நோயாளிகளுக்கு சாதாரண அறுவை சிகிச்சை சாத்தியம் ஆகும். கல்லீரலைத் தாண்டி கேன்சர் பரவாமலும், குறிப்பிட்ட அளவுக்குள் கட்டி இருந்தாலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உதவும். அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளுமே, கேன்சரை ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே உதவும்.

அதுவும் குறிப்பிட்ட காலம் வரையே. சில வகை கட்டிகளை ஆல்கஹாலை ஊசி மூலம் செலுத்துவதன் (PEI – percutaneous ethanol injection) மூலமோ, எலக்ட்ரோடுகள் கொண்டு வெப்பப்படுத்துவதன் (RFA – radio frequency ablation) மூலமோ குணப்படுத்த முடியும். சருமத்தில் ஊசியைச் செலுத்தியோ, கீஹோல் சர்ஜரி முறையிலோ இவை செய்யப்படும்.இன்னும் வளர்ச்சியடைந்த கட்டிகளுக்கு TACE (transarterial chemo embolization) எனும் நுட்பம் கையாளப்படும். கேன்சர் கட்டிக்கு ரத்தம் செல்லும் தமனியில் ஒரு நுட்பமான கதீட்டர் குழாய் வழியாக ஹீமோதெரபி மருந்துகளும் பிற மருந்துகளும் நேரடியாகச் செலுத்தப்படும் முறை இது. இதில் கேன்சர் செல்களை கொல்லும் மருந்தை, அந்தக் கட்டியிலேயே செலுத்துகிறோம். அதோடு, அந்தக் கட்டிக்கான ரத்த சப்ளையும் நிறுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லாத கட்டிகளுக்கு ஹீமோதெரபி அளிக்கிறது. இது குறுகிய கால நிவாரணமே. SIRT எனும் செலக்ட்டிவ் இன்டர்னல் ரேடியேஷன் தெரபி போன்ற முறைகளும் பரிசோதனை அடிப்படையில் சில நோயாளிகளுக்குச் செய்யப்படுகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே பிரைமரி லிவர் கேன்சர் அறியப்பட்டால் மிக நல்லது. 50 சதவிகித பரவல் என்றால் 5 ஆண்டுகள் வரை காப்பாற்ற முடியும். 75 சதவிகித பரவல் என்றால், கல்லீரல் மாற்றுக்குப் பிறகு 5 ஆண்டுகள் ஆயுள்.

செகண்டரி லிவர் கேன்சர் சிகிச்சை

இதற்கான சிகிச்சை ஒரிஜினலாக எந்த இடத்தில் கேன்சர் தோன்றியதோ, அதன் அடிப்படையிலேயே அமையும். பல நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் கல்லீரலில் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்படும். அடிப்படை கட்டியில் உள்ள கேன்சர் ரத்தவோட்டம் மூலமே கல்லீரலுக்குப் பரவி இருப்பதால், உடலின் மற்ற பகுதிகளும் கேன்சர் அபாயத்துக்கு உட்பட்டவையே. அறுவை சிகிச்சைக்குத் துணையாக இருக்கும் வகையில் ஹீமோதெரபி, ரேடியோதெரபி போன்றவையும் அளிக்கப்படும்.

இறுதி நிலை கல்லீரல் நோயில் சிக்கியோர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருப்பதன் மூலமே ஓரளவு தப்ப முடியும். பிரைமரி லிவர் கேன்சர் நோயாளிகளுக்கும் இதுவே பொருந்தும். ஆரம்ப நிலையில் அறியப்படும் கட்டிகளை நீக்க வழி உண்டு. மது அருந்துவோர் மட்டுமல்ல… ஆரோக்கியமான நபர்களும் கூட ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரல் செயல்பாடு ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவையெனில் அல்ட்ராசோனாகிராம் சோதனையும் எடுக்க வேண்டும்.

ht4268

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button