மருத்துவ குறிப்பு

கழுத்தை கவனியுங்கள்!

முதுகுவலிக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் கழுத்து வலிக்குக் கொடுக்கப்படுவதில்லை. கழுத்தில் ஏற்படுகிற வலி, அலட்சியப் படுத்தக்கூடியதல்ல… உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது” என எச்சரிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் ஜி.கே.குமார். கழுத்து வலிக்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றியும் விளக்குகிறார்.

”இதயத்துலேர்ந்து மூளைக்கும், மூளைலேர்ந்து உடம்போட மத்த பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்ற நரம்புகள், கழுத்துப் பகுதிலதான் இருக்கு. அடிபட்டாலோ, அந்த நரம்புகள்ல பாதிப்பு வந்தாலோகூட கழுத்து வலி வரலாம். சாதாரண வலி, சுளுக்குனு அதை அலட்சியப்படுத்தறது ஆபத்தானது. வயசானவங்களுக்கு வரும் கழுத்து வலிக்கு, கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாகலாம். மத்தபடி கழுத்து எலும்பிலுள்ள சிறு சந்திப்புகள்ல வரக் கூடிய பாதிப்புகளால ஏற்படும் வலிதான் பிரதான காரணம். இது சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன்ல தெரியாது. பிரத்யேகக் கண்டுபிடிப்பு முறைகள் தேவை.

கழுத்து தண்டுவடத்துல உண்டாகிற பாதிப்பும், கழுத்து எலும்பு விலகறதும் கூட கழுத்து வலிக்கான காரணமாகலாம். கழுத்து வலி சிலருக்கு பின் தலைவலியாகவோ, தோள்பட்டை வலியாகவோ, கை வலியாகவோ மாறலாம். கழுத்துக்கான சிகிச்சையைக் கொடுத்தாலே, மத்த வலிகள் குறையறதைப் பார்க்கலாம். சரியான காரணத்தைக் கண்டுபிடிச்சு, சரியான மாத்திரை, சிறப்பு சிகிச்சைகள், கழுத்துத் தசைகளை வலுப் படுத்தும் பயிற்சிகள் மூலமா வலியை விரட்டலாம்” என்கிறார்.

கழுத்து வலி இருப்போர் செய்யக் கூடாதவை…

சுளுக்கு எடுக்கறதும், மசாஜ் செய்யறதும், நரம்பு பாதிப்பு, சதைத் தெறிப்பு போன்றவற்றை உண்டு பண்ணி தொடர்ச்சியான வலியையும் கொடுக்கும்.

படுத்துக்கிட்டே டி.வி. பார்க்கிறது, படிக்கிறது, உட்கார்ந்துக்கிட்டே தூங்கறதெல்லாம் கூடாது.

சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கக் கூடாது.

செய்யக் கூடியவை…

கழுத்துத் தசைளைப் பலப்படுத்தற பயிற்சிகளை டாக்டரோட ஆலோசனைப்படி செய்யலாம். தூங்குவதற்கு 10 செ.மீ. உயரம் உள்ள தலையணை உபயோகிக்கணும். கம்ப்யூட்டர் மானிட்டர், கண்களைவிட 20 டிகிரி தாழ்வாகவும், கண்கள்லேர்ந்து 20 இன்ச் இடைவெளி விட்டும் இருக்கணும்.
ht4044

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button