மருத்துவ குறிப்பு

தலையில் நீர்க் கோர்ப்பு

ஏன்? எப்படி?

ஒரு சிலர் தலை பாரமா இருக்கு’ என சொல்லக் கேட்டிருப்போம். இது சாதாரண விஷயமல்ல… சிலநேரம் நம் ஒட்டுமொத்த செயல்களையும் முடக்கிவிடக் கூடியது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் உண்டாகும் இந்த தலைபாரம் தொடர்ந்து தலைக்கு குளிப்பதால் ஏற்படுகிறது என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு என்கிற பொதுநல மருத்துவர் ஹரிகிருஷ்ணா, காரணங்கள் மற்றும் சிகிச்சைகளை விளக்குகிறார்…

“ஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இவை மட்டுமே காரணங்கள் அல்ல.

வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.

ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தலையை முழுவதும் மூடக்கூடிய தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்கு காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில்சேர்த்துக்கொள்ள வேண்டும். டாக்டர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை கவனத்துடன் சாப்பிட்டு வர வேண்டும்.

தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் வகைகளில் ஒன்றான Sinusitis பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய மூக்கு எலும்பான Nasal Septum வளைவில்லாமல் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மூக்கு வளைந்து (deviation) இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்னை அடிக்கடி ஏற்படக்கூடும்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

பிற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும், அலர்ஜி காரணமாகவும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து கொள்ள அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்க வேண்டும். குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக்கொண்டு சிகிச்சையை தொடர வேண்டும்.”
ht4271

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button