வீட்டுக்குறிப்புக்கள்

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

தொலைக்காட்சி வாங்குவதற்கு முன் அது பற்றி ஆராய்வது என்பது தொலைதூரம் பயணிப்பது போல தீரவே தீராத விஷயம்! இந்த இதழில் முப்பரிமாண (3 டி) திரைகள் பற்றி அலசுவோம்!

ஒரு காலத்தில் ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்று ஒரு முப்பரிமாண படம். டப்பிங்தான்… மக்கள் கூட்டம் கூட்டமாக போய் பார்த்தார்கள். நாங்கள் அனைவரும் வேனில் கும்பகோணம் சென்று பார்த்தோம். அப்போதெல்லாம் மஹிந்திரா வேன் வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்வோம். அதில் ஒரு கூட்டுக்குடும்பம் சரியாக கொள்ளும். 30 பேர் இருந்தாலும் ஏறிடுவார்கள். குறைந்தால் அக்கம்பக்கமும் ஏற்றப்படும். எனக்கு டயர் மேலே மேடை போன்ற அமைப்பு இருக்குமே… அதில் உட்காரத்தான் இடம் கிடைக்கும். கடைசி வரை என்னை வளரவே விட வில்லை.

‘கீர்த்தி அட்ஜஸ்ட் பண்ணிப்பா’ என்று சொல்லிச் சொல்லியே அட்ஜஸ்ட் செய்ய வைத்த – இன்று வரை செய்ய வைக்கும் குடும்பம்!அப்படி கஷ்டப்பட்டு போய் பார்த்த சினிமாக்கள் இன்று ஹோம் தியேட்டர் வடிவில் அதை விட நூறு பங்கு சத்தம் மற்றும் காட்சிகளில் துல்லியத்துடன் வீட்டுக்குள் கதவைத் தட்டாமலே நுழைந்து விட்டது. இருப்பினும் உற்றார், உறவினருடன் சென்று பார்த்த தீபாவளி ரீலிஸ் படங்கள் ஒரு தனிச்சுவையை கொடுத்த அளவுக்கு இந்த தொலைக்காட்சிகள் கொடுக்கிறதா? நாம் ‘ஒலியும் ஒளியும்’ பற்றி ஃபிளாஷ்பேக் எழுதுவதைப் போல, அடுத்த தலைமுறை சென்னை மழை, நடிகர் சங்கத் தேர்தல், சீரியல் அழுகை பற்றியெல்லாம் அந்தக் காலத்தில் என்று வியந்து கொண்டு இருக்கலாம்!

இங்கு முப்பரிமாணம் என்று எதுவுமில்லை. அது கண்களை ஏமாற்றும் வித்தை. கண்ணை நுணுக்கி மூக்கைப் பார்த்தால் சில நேரம் இரண்டாகத் தெரியும். நிஜத்தில் ஒரு மூக்குதானே இருக்கும்? அதுபோலத்தான் முப்பரிமாண காட்சிகள். கொஞ்சம் புள்ளி
களின் இடத்தை மாற்றி கண்ணுக்கு ஒரு தோற்றப் பிழை – அதாவது, இல்யூஷன் உருவாக்கி – கைக்கு அருகில், கண்ணுக்கு அருகில் காட்சிகள் வருவதுப் போல உணர வைக்கப்படுகிறது. ‘மை டியர் குட்டிச்சாத்தா’னில் கோன் ஐஸ்க்ரீம் கைக்கு அருகில் வரும். அதில் இருக்கு ம் செர்ரி வேறு வழிந்து ஓடும். குழந்தைகள் எல்லாம் இருக்கைகளை விட்டு அதைப் பிடிக்க நடுவில் வந்து நின்றது இன்னும் நினைவில் ஐஸ்க்ரீமாக வழிகிறது!

முப்பரிமாண திரைகளில் இரு வகை உண்டு ஆக்டிவ் (செயல்படும்) மற்றும் பாஸிவ் (செயலற்ற) வகைகள். கடையில், ‘எங்கள் டி.வி.யில் சாதா முப்பரிமாண கண்ணாடி போதும்… இதற்காக பிரத்யேக கண்ணாடி தேவையில்லை’ என்பார்கள். இது பாஸிவ் (செயலற்ற) வகை. கண்ணாடி வேலையை திரையே செய்து விடும். கூடுதலாக கோடுகள், அகலங்கள், உயரங்களை புள்ளிகளாக்கி மேம்்படுத்தப்பட்ட முப்பரி மாண காட்சிகள் புலப்படும். அதற்காக 2D காட்சிகள் மாறாது என்றேசொல்லுகிறார்கள். அதனால் HD துல்லியம் மாறுமா என்பது சந்தேகத்துக்கு உரியது. ஆனால், எல்லாவற்றையும் சரி செய்யும் தொழில்நுட்பங்கள் தினம் தினம் அறிமுகம் ஆகிக்கொண்டு இருக்கிறதே.

பாஸிவ் வகை கண்ணாடி
கண்ணாடி கனம் இருக்காது.
பேட்டரி தேவையில்லை.
எளிதாக பயன்படுத்தலாம்.
ஆக்டிவ் வகை கண்ணாடி
ஆக்டிவ் வகையில் கண்ணாடி

பேட்டரியில் ஓடும். இரு கண்களுக்கும் தனித் தனி கோணத்தில் பார்வை அமைப்பை மாற்றி ஆழம் கொடுத்து முப்பரிமாணம் தெரியும். இதில் ஆழம், துல்லியம், அதிகம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், கண்ணாடி அதிக விலை. இரண்டு திரைகளில் எது வாங்கினாலும் விலையை கண்ணாடி விலையுடன் சேர்த்து கணக்கிட்டு வாங்க வேண்டும்.பொதுவாக முப்பரிமாண காட்சிகள் அதற்காக எடுக்கப்பட்ட படங்களில் சிறந்து விளங்கும். சில திரைகள் 2D யை 3D ஆக மாற்றி பார்க்கலாம் என்பதில் அத்தனை காட்சித் துல்லியம் இருக்காது. ஏன் என்றால், அவை முப்பரிமாண காட்சிகளுக்காக தயாரிக்கப்பட்டவை அல்ல. எப்போதும் கன்டன்ட் எனப்படும் மாவு முக்கியம். இல்லாவிட்டால் எப்படி சுட்டாலும் இட்லி நல்லா இருக்காதுதானே? கடைசியில் கடுப்பாகி துப்பாக்கியில்தான் சுட்டுப் பார்க்கணும்!

பெரும்பாலும் நம்மவர்கள் சீரியல்கள், செய்திகள், குட்டி வாண்டுகள் கார்ட்டூன் போன்றவை பார்க்கவே தொலைக்காட்சி வாங்குகின்றனர். வெகு சிலரே 3D திரைப்படங்கள் போட்டுப் பார்க்கிறார்கள். எனவே, முப்பரிமாண திரை எந்தளவுக்கு உபயோகம் ஆகும் என்பது சந்தேகம். எடுத்துக்காட்டாக எங்கள் வீட்டில் அதிக விலை கொடுத்து வாங்கிய முப்பரிமாண திரையில் இன்று வரை ஒரு படம் கூட பார்த்தது இல்லை. சிலர் ஆரம்பக் காலத்தில் மட்டும் ஆர்வமாக பார்ப்பார்கள். முப்பரிமாணம் முக்கிய நோக்கமாக இருந்தால் பாஸிவ் வகை கண்ணாடி கனமில்லாமல் இருக்கும்.

ஆனால், திரை துல்லியத்தை சோதித்து வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அருகில் இருந்து பார்த்தால் திரையில் மெல்லிய கோடுகள் கண்ணுக்கு தெரியும். போதுமான தூரத்தில் அமர்ந்து பார்த்தால்தான் முப்பரிமாண காட்சிகள் சரியாக தெரியும். அதே போல 4k மாடல்களில் பிக்சல்கள் அதிகம் இருப்பதால் பாஸிவ் முப்பரிமாண வகைகளில் துல்லியம் அதிகமாக இருக்கும்.

ரிமோட் கன்ட்ரோல்

இதிலும் பல வகைகள் வந்து விட்டன. ஒரே ரிமோட் கன்ட்ரோல் வைத்து எல்லா மின்னணு சாதனங்களையும் உபயோகிக்கலாம். ஸ்மார்ட் திரைகளில் மவுஸ் போல பாயின்டரை திரையில் மாற்றும் வசதி உள்ள ரிமோட்களும் வந்து
விட்டன. பெரும்பாலும் இயக்க எளிதானவை நல்லது.

4K, UHD திரைகள்

கடைக்குச் சென்றால் 4k வேண்டுமா? 4k uhdதான் சிறந்தது என்றெல்லாம் சொல்லக் கேட்போம். அவற்றின் தொழில்நுட்பம் கேட்டால் குழப்பமே மிஞ்சும். ஒவ்வொரு கடையிலும் அவர்களுக்கான விருப்பமாக ஒரு பிராண்டு வைத்து இருப்பார்கள். அதைப் பற்றியே பெரிதாக பேசுவார்கள். சார்ட் போட்டு கொடுத்து செய்ய சொல்லுவார்கள். நாம் துல்லியத்தில் மயங்கிப் போவோம்.

1080p என்பது அகலவாக்கில் 1080ம் உயரவாக்கில் 1920ம் இருக்கும். இதே 4K என்றால் நான்கு பங்கு பிக்சல்கள். மிகப்பெரிய திரைகளுக்கு இத்தனை பிக்சல்கள் தேவையாக இருக்கலாம். UHD என்பதும் நிறைய பிக்சல்கள் கொண்டது. ஆனால், நாம் வீட்டில் மிக அருகில் அமர்ந்து பார்க்க மாட்டோம். இதுவே சினிமா தியேட்டரில் 4k தொழில்நுட்பம் என்றால் அற்புதமாக இருக்கும். எத்தனை அருகில் இருந்தாலும் புள்ளிகள் இல்லா துல்லியத்தன்மை அதன் அதிக அளவு பிக்சல்களால் கிடைக்கும். இது சிறிய அளவு திரைகளுக்கு தேவை இல்லை.

சிறிய அளவு திரைகளில் 4k, UHD என்ற பிக்சல்கள் மிக அதிகமாக இருப்பதை விட, சரியான கான்ட்ராஸ்ட் ரேஷியோ, ஓரளவு பிக்சல்கள் இருக்கும் திரைகளின் துல்லியம் சிறப்பாக இருக்கும்.அடுத்து 4k கன்டன்ட் எனப்படும் திரைப்படுத்தும் காட்சிகள். நமக்கு 4k கேமராவோ, அப்படி தயாரிக்கப்பட்ட சினிமாக்களோ அதிக அளவில் வரவில்லை. வெறும் திரை தொழில்நுட்பம் மட்டும் போதாது. கன்டன்ட் சிறந்ததாக இருக்க வேண்டும். கடையில் டெமோவில் காட்டப்படும் ரோஜா இதழ்களின் துல்லியம் நம் சீரியல்களில் இருக்காது. மாவுக்கு ஏற்ற தோசைதான். அது வெள்ளித் தட்டில் வைத்தால் என்ன?

தங்கத் தட்டில் வைத்தால் என்ன?

தினம் ஒரு தொலைக்காட்சி என்று அறிமுகமாகும் வேளையில் தேர்ந்தெடுப்பது மிக குழப்பமான ஒன்று. இத்தனை எழுதி இருந்தாலும் கடைக்கு சென்றால் இன்னொரு விஷயம் சொல்லி அது அந்த புது தொலைக்காட்சியில் இருப்பதாகச் சொல்வார்கள். எனவே அளவு, சத்தம், துல்லியம், இன்டர்நெட் தேவை என்றால் அதுபற்றி கவனிப்பது சிறந்தது. மிக அதிக விலை, மிக அதிக வசதிகள் கொண்டது என்றால், இன்னும் தீர யோசித்தே வாங்க வேண்டி இருக்கிறது.

எத்தனை விலை வரை தொலைக்காட்சி வாங்கலாம்? எடுத்துக்காட்டாக…

500 ரூபாய் செகண்ட் ஹாண்ட் தொலைக்காட்சியில் இருந்து 28 லட்சம் ரூபாயில் கூட கிடைக்கிறது. சோனி, சாம்சங் நிறுவனங்கள் துல்லியத்துக்கும், எல்.ஜி. போன்றவை அதிக, புதுமையான வசதிகளுக்கும் பெயர் பெற்றவை. மைக்ரோ மேக்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையில் கொடுக்கின்றன. சில நவீன வகை தொலைக்காட்சிகள் படத்தில் உள்ள தொலைக்காட்சி ஏதோ வெளிநாட்டு விற்பனைக்கு அல்ல. இந்தியாவில் எல்.ஜி. விற்கும் தொலைக்காட்சிதான். பெரும்பாலான வீடுகளில் நாம் இப்போதுதான் 40 இன்ச் திரைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த திரை 105 இன்ச்… அதாவது, 266 செ.மீ. வீட்டுக்குள்ளேயே திரையரங்கை விட பல மடங்கு துல்லியமாகவே திரைப்படம் பார்க்கலாம். மொபைலில் இணைப்பது, யுனிவர்சல் ரிமோட், ஓபன் சோர்ஸ், ஸ்மார்ட், அல்ட்ரா எச்.டி, 4கே என்று பல வசதிகளை உள்ளடக்கியது.’நாங்க சும்மா இருப்போமா’ என்று சாம்சங்கும் அதிக விலையுள்ள திரைகள் விற்க களத்தில் குதித்து விட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் நவீன திரையின் விலை அதிகமில்லை ஜென்டில் வுமன்… வெறும் இருபத்தி எட்டே லட்சம்! கூவிக் கூவி விற்கிறார்கள். 5 கோடிக்கு கார் விற்கும் இந்தியாவில் 30 லட்சத்துக்கு திரை வாங்குவது சகஜமே!

இதில் ஸ்மார்ட் வசதி, 4k எல்லா வசதிகளும் இருக்கி்ன்றன. விலை உயர்ந்த சாம்சங் திரைகளில் இருக்கும் துல்லியம் இதில் கூடுதலாகவே தெரிகிறது. ரூ.23 லட்சத்துக்கு Curved எனப்படும் வளைந்த தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அது 88 இன்ச்… 223.7 செ.மீ. இதில் நானோ கிறிஸ்டல் துல்லியம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 80 லட்சம் பிக்சல்கள் வேறு. மிகத் துல்லிய ஆழமான கருப்பில் இருந்து சரியான வெண்மை வரை இருப்பதாகக் கூறுகிறார்கள்.

திரையில் வெண்மையை மிகச்சரியான வெண்மையாகவும் கருப்பை மிக ஆழமான துல்லிய கருப்பாகவும் காட்டும் திரைகள் மிகத் துல்லிய காட்சியை கொடுக்கும். சில திரைகள் ப்ரைட்னஸ் எனப்படும் வெளிச்சத்தை சரியான அளவுகளில் கொடுத்தும் துல்லியமான நிறங்கள் இருப்பது போல காட்டும். ஆனால், கான்ட்ராஸ்ட் துல்லியம் இன்னும் சிறந்தது. இது போன்ற நவீன திரைகளை செல் பேசியில் இணைத்து கேம் ஆடலாம். இணையத்தில் இருந்து நெட் பிளிக்ஸ் போன்ற தளங்களில் இருந்து திரைப்படம் பார்க்கலாம்.

இணைய இணைப்பை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஹேங் ஆகச் சாத்தியம் உள்ளது. இப்படி இன்னும் வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘பாத்திரம் கழுவிக் கொடுக்கும்… அதுவும் சீரியல் ஹீரோயின்கள் அழுகையில் ‘என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்! அளவை தவிர பெரும்பாலான வசதிகள் 40 இ்ன்ச் அளவிலும் கிடைப்பது நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு ஆறுதல். தினம் தினம் புதுப்புதுத் தொலைக்காட்சிகள் அறிமுகம். எக்கச்சக்க பிராண்டுகள் வேறு. எனவே, இது ஒரு மாதிரி மட்டுமே.பெரும்பாலும் ஸ்மார்ட் வசதி – அதாவது, இணைய வசதி, முப்பரிமாணம் இரண்டும் இருந்தால் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். ஒவ்வொன்றுக்கும் உள்ள வசதிகள் பட்டியல் போல நீண்டுகொண்டே இருக்கும். சரியான விலையில் தேர்ந்தெடுப்பதே மிகப்பெரிய சவால்தான்! ஹேப்பி வியூவிங்!

மைக்ரோமேக்ஸ் பிலிப்ஸ் Vu ஒனிடா சோனி சாம்சங் எல்.ஜி.
மாதிரி வகை LED42K316 39PFL4579/V7 LED40K16 LEO40HMS BRAVIA KLV-40R562C 101.6 cm (40) LED TV Samsung 40J5100 102 cm (40) LED TV 43LF513A 108 cm (43) LED TV
திரை அளவு 40 42 39 40 40 40 43
வகை எல்.இ.டி எல்.இ.டி எல்.இ.டி எல்.இ.டி எல்.இ.டி எல்.இ.டி எல்.இ.டி
பிக்சல் 1920 x 1080 1920 x 1080 1920 x 1080 1920 x 1080 HD 1920 x 1080 HD 1920 x 1080 HD 1920 x 1080
கான்ட்ராஸ்ட் ரேஷியோ 3000000:1 1000000:1 4000000:1
ஆடியோ வூபர். 20 w 300W 64 W 95 W
HDMI உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு
விலை 27,999 க்கு மேல் 30,499 க்கு மேல் 26,900 க்கு மேல் 39,999 க்கு மேல் 53,500 க்கு மேல் 42,825 க்கு மேல் 38,190 க்கு மேல்
WI FI உண்டு
வாரன்டி ஒரு வருடம் ஒரு வருடம் ஒரு வருடம் ஒரு வருடம் ஒரு வருடம் ஒரு வருடம் ஒரு வருடம்
ld4034

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button