ஆரோக்கிய உணவு

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமான பச்சை பயறு குறித்து நாம் இன்று பார்ப்போம்: பல்வேறு சத்துக்களை கொண்ட பச்சை பயறு, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படக் கூடியது. பச்சை பயறில் புரதம், மினரல், வைட்டமின் அதிகம் உள்ளன. பச்சை பயறை கொண்டு உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் 2 பல் பூண்டு, மிளகு தட்டி போடவும். லவங்க பட்டை சேர்க்கவும். இதில், வேகவைத்து அரைத்து வைத்த பச்சை பயறை போட்டு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சுவைக்காக உப்பு சிறிதளவு சேர்க்கலாம். 5 நிமிடத்தில் பச்சை பயறு சூப் தயார். இதை சாப்பிட்டுவர பிபி, கொழுப்பின் அளவு குறையும்.முளைவிட்டு இருக்கும் பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.

2ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும். சுருக்கங்கள் மறைந்து முகம் மென்மை பெறும்.பச்சை பயறை கொண்டு பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் வலியை குறைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பச்சை பயறை ஊற வைத்து அரைத்து பசை எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை சிறிது நேரம் கிளறினால் களி போன்று வரும். இதை இளஞ்சூடு பதத்தில் வீக்கம் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

இது, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரப்பால் ஏற்படும் மார்பக வீக்கத்தை சரி செய்யும். பால் சுரப்பை சமப்படுத்தும். அக்குளில் ஏற்படும் நெறிக்கட்டியை சரி செய்யும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறியபின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.
02 1372744111 10 moongdal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button