மருத்துவ குறிப்பு

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா?

நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை விட அதிகமாகக் பருகுவதாலும், குறைவாகக் பருகுவதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் வல்லுநர். பொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும்.

நாளடைவில் அவை ரத்தத்திலேயே தங்கி, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னை வரக்கூடும். சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பதால், உடனடியாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். தினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வரும் நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்..?

சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

சிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்பளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.

வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள். இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்..?

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்கவில்லையெனில், உடல் சோர்வு ஏற்படும். ஆண்கள் ஒரு நாளில் 3.5 – 4 லிட்டர், பெண்கள் 2.5 – 3 லிட்டர் தண்ணீருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும். நீராகத்தான் குடிக்க வேண்டும் என்பதில்லை, மோர், இளநீர், பழரசம் போன்ற வகையிலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யலாம். குளிர்காலத்தில் இந்த அளவு கொஞ்சம் குறையலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்னைகள் வரை ஏற்படும்.watertherapy 002

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button