சமையல் குறிப்புகள்

சுண்டைக்காய் மகத்துவம்..!

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

உடல் சோர்வு நீங்கும்
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

Related Articles

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

குடல்புண்களை ஆற்றும்
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

நீரிழிவுக்கு மருந்து
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

வாந்தி மயக்கம் நீங்கும்
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

20150809130300

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button