ஃபேஷன்

உன்னையே நீ அறிவாய்!

ஃபேஷன்: ரோச்செல் ராவ்

டிசைனர் கருண் ராமன் நடத்திய ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் மிஸ் இந்தியா (2012) ரோச்செல் ராவ். தினசரி வாழ்வில் ஒருகல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ பின்பற்றக்கூடிய ஃபேஷன் டிப்ஸ் பற்றிச் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டோம்…

”மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் கண்மூடித்தனமாக ஒரு ஃபேஷனை பின்பற்றக் கூடாது.ஒவ்வொருவருடைய உடல் அமைப்பும் வேறுவேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நம் உயரம், எடை, தலைமுடியின் அமைப்பு, கண்கள் எப்படி இருக்கின்றன என்று நம்மைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகே நமக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கும், எந்த ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்ய வேண்டும்.

எனக்கு வசதியாக இருக்கும் ஹைஹீல்ஸ் இன்னொருவருக்குப் பொருத்தமாக இருக்காது. ஃபேஷன் என்ற பெயரில் நாம் மெனக்கெட்டு செய்வது, கடைசியில் நம்மைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக கிண்டல் செய்யும் வகையில் ஆகிவிடக் கூடாது. முக்கியமாக, உடைகள் அணிந்த உடன், நமக்கே நம் மீது நம்பிக்கையும் மதிப்பும் வர வேண்டும். நெருடல் இல்லாமல் வசதியாக உணர வேண்டும். தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தாமல், உடைகளும் வசதியாக இல்லாவிட்டால், அந்த நெருடலிலேயே இருப்போம்.

நமக்கே நம்பிக்கை இல்லாதபோது, அழகான ஆடை கூட நம்மை அழகற்றவர் போன்ற தோற்றத்தை உருவாக்கி விடும். நம்முடைய உடல் அமைப்பைப் போலவே, தமிழ்நாட்டின் பருவநிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். வெப்பம் மிகுந்த ஊர் என்பதால், குளிர்பிரதேசமான மேற்கத்திய நாடுகளில் பின்பற்றுகிற நாகரிகமுறைகளை அப்படியே நாமும் பின்பற்றுவது பலன் தராது.ஃபேஷன் என்பது தினமும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால், நிறைய புத்தகங்கள், ஃபேஷன் தொலைக்காட்சிகள் பார்க்க வேண்டும். சினிமாக்களில் பிரபலங்களின் அலங்காரங்களை கவனிக்க வேண்டும். இணையதளங்களில் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம்” என்கிறார்.

ஃபேஷனில் சென்னைக்கு என்ன இடம்?

”ஃபேஷன் விஷயத்தில் சென்னைதான் பலவிதங்களிலும் பெஸ்ட். பாரம்பரியத்தை சேதப்படுத்தாமல் அதில் நாகரிகத்தைக் கலப்பதில் நம் ஆட்கள் கில்லாடிகள். அதனால்தான் ரெஹானே, சைதன்யா போன்ற நம் சென்னை ஃபேஷன் டிசைனர்களை மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருக்கும் ஃபேஷன் டிசைனர்கள் கூட பின்பற்றுகிறார்கள். பாரம்பரியத்துடன் நவீன நாகரி கத்தைக் கலக்கும் ஒரு புதிய ட்ரெண்டை நாம் உருவாக்கி இருக்கிறோம். உண்மையில் நாம்தான் ட்ரெண்ட் செட்டர்” என்கிறார் சென்னைப் பெண்ணானரோச்செல் ராவ்!

ld3622

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button