மருத்துவ குறிப்பு

ஏ.சி. ஒருகணம் யோசி!

சந்தேகங்களும் தீர்வுகளும்
ஒரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?

”எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

”வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.

பொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ் (Actino mycetes). அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.

ஏ.சி-யை முறையாகப் பராமரித்தால் மட்டும் போதுமா என்றால் போதாது. ஏ.சி. அறையில் இருப்பவர்கள் கட்டாயம் தங்களையும் தாங்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஏ.சி. அறையில் காற்றோட்டம் இருக்காது. இதனால், நோயுற்ற ஒருவரின் வாய், சுவாசம் போன்றவை மூலம் அங்கு இருப்பவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று பரவும். சிலர் எச்சில் தெறிக்க, உரையாற்றுவார்கள். அவர்கள் ஏ.சி. அறையைத் தவிர்ப்பது அந்த அறையில் இருக்கும் மற்றவர்களுக்கு நல்லது. மேலும் ஏ.சி. அறையில் அழுக்கு சேர்ந்தாலும் துர்நாற்றம் உருவாகும். சிலர் பல நாட்கள் துவைக்காத அழுக்கு சாக்ஸ் அணிந்து வந்து கமுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள். இன்னும் சிலர் காலணிகளைக் கழுவாமல் அணிந்து வருவார்கள். அதில் நாட்பட்ட அழுக்கும் வியர்வையும் கலந்துகட்டி செத்த எலியின் வாடையை உருவாக்கும். இவை அனைத்தும் சுவாசக் கோளாறு, நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்குக் கூடுதல் தொந்தரவு, தோல் அழற்சி போன்றவற்றை உருவாக்கும். எனவே, ஏ.சி. அறை மட்டும் அல்ல… அங்கு இருப்பவர்களும் சுத்தமாக இருப்பது அவசியம்.

நமது உடலின் ஆரோக்கியமான வெப்ப நிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். இது ஏறவும் கூடாது; இறங்கவும் கூடாது. சிலர் காருக்குள் ஏ.சி-யைப் போட்டுவிட்டு ஜன்னல், கதவுகளை அடைத்துக்கொண்டு தூங்குவார்கள். நீண்ட நேரம் அப்படி இருக்கும்போது குளிர்நிலை அதிகமாகி உடல் வெப்ப நிலை குறையும். அப்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறையும். இதனால், தூக்கத்திலேயே மயக்கம், மூச்சுத் திணறல், கை கால் விறைப்பு ஆகியவை ஏற்பட்டு மரணம்கூட நேரிடலாம்.

இன்னொரு விஷயம்… ஏ.சி. இயந்திரத்தில் இருக்கும் ஹீலியம் வாயு கசியும்பட்சத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும். தீ விபத்தை உருவாக்கும்” என்கிறார் இளங்கோ.

மொத்தத்தில் ஏ.சி-யில் இருப்பது தவறு இல்லை. எப்படி இருக்கிறோம்… இயந்திரத்தை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நமது உடலின் ஆரோக்கியம்.
p60a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button