மருத்துவ குறிப்பு

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

வரும் முன் காப்போம்

எப்போ வரும்… யாருக்கு வரும் என்பதே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுதான் புற்றுநோய். குணப்படுத்தவே முடியாத நோய் என்கிற கட்டத்தைத் தாண்டி, இன்று புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடக்கூடிய அளவுக்கு மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துவிட்டது. ஆனாலும், மக்களுக்கு புற்றுநோய் மீதான பயம் குறைந்தபாடில்லை. புற்றுநோயின் இப்போதைய நிலவரம்? அதற்கான சிகிச்சையில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எதிர்காலத்தில் எப்படி? இப்படி எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர் பிரகாஷ் துரைசாமி…

மக்களுக்கு இன்று கேன்சர் பற்றிய விழிப்புணர்வு நிறையவே அதிகரித்துள்ளது. சாதாரண கட்டி என்றால் கூட மருத்துவரை அணுகிவிடுகிறார்கள். புற்றுநோயில் 4 நிலைகள் உண்டு. முதல் 2 நிலைகளில் எளிய முறையில் சிகிச்சை அளித்து முழுமையாக சரி செய்துவிடலாம். 3 மற்றும் 4ம் நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கொஞ்சம் சவாலானது. அறுவை சிகிச்சை செய்த பின்னும் கதிரியக்க சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

இப்போது அதிகம் வரும் புற்றுநோய்கள் என்றால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயும். முன்பு குறைவாக இருந்த தைராய்டு புற்றுநோயும் இப்போது பெண்களை அதிக அளவில் தாக்க ஆரம்பித்துள்ளது. ஆண்களுக்கு புகையிலை மற்றும் மதுப்பழக்கத்தால் வாய் புற்றுநோய், உணவுக்குழல் புற்றுநோய் அதிகம் வருகிறது. ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயிறு அல்லது குடல் புற்றுநோய் வருகிறது.

கேன்சர் வருவதற்கு வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ‘புகை பிடிக்காதவர்களுக்கு கூட கேன்சர் வருகிறதே’ என்று கேட்பார்கள். புகை பிடிப்பவர்களை விட புகை பிடிக்காதவர்களுக்கு வரும் கேன்சரை எளிமையாகக் குணப்படுத்திவிடலாம். புகை பிடிப்பவர்களுக்கு கேன்சரை உருவாக்கும் காரணிகள் எளிதில் உருவாகும். மது, புகை பழக்கம் இல்லாத சிலருக்கு கேன்சர் வருவதற்கு, மரபியல் ரீதியாக வரும் பாதிக்கப்பட்ட செல்களே காரணமாகும். தாய், தந்தை வழியில் யாருக்காவது கேன்சர் பாதிப்பு இருந்தாலும் வரக்கூடிய வாய்ப்புண்டு.

இப்போது புதிதாக Human papilloma virus தாக்குதலால் ஆண்களுக்கு வாய் புற்றுநோயையும், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயையும் அதிகம் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் உடலுறவு மூலமாகவே பரவுகிறது. தைராய்டு கேன்சர் பெண்களை தான் அதிகம் தாக்கும் என்றாலும், அண்மைக்காலமாக ஆண்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது. தைராய்டு சுரப்பியை அகற்றிவிட்டு, நெரிக்கட்டு எதுவும் இருந்தால் அதையும் அப்புறப்படுத்துவோம். அதன் பிறகு `Iodine therapy’ கொடுத்து குணப்படுத்துவோம்.

கேன்சர் தொற்றுநோய் கிடையாது. மரபியல் ரீதியாக கேன்சரை உருவாக்கும் காரணிகள் இருந்தால் கூட, அதை
கண்டறியக்கூடிய ஜெனிட்டிக் அனலிசிஸ் வசதி உள்ளது. கேன்சர் வருமா என்பதை சோதனை செய்து முன்னரே தடுத்துவிடலாம். அனுபவம் வாய்ந்த மருத்துவர் குழுவும், ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவும் எல்லா வசதிகளுடன் இருந்தால்தான், புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

உடலில் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையில் கட்டியோ, கழலையோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரைப் பார்த்து அது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா எனத் தெரிந்து கொள்ளுங்கள். லைப்போமா என்னும் கரையாத கொழுப்புக்கட்டி ஆபத்தில்லாதது.

அவற்றில் அதீத வளர்ச்சியோ, வலியோ இருந்தாலோ, ரத்தக் கசிவு காணப்பட்டாலோ அது `லைப்போ சார்க்கோமா’ எனும் கேன்சராக மாறக்கூடிய வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். கேன்சர் நோய் 80 முதல் 90 சதவிகிதம் இன்று குணப்படுத்தக் கூடிய நோயாக மாறியுள்ளது. அதனால் புற்றுநோய்குறித்த பயம் இனி தேவையில்லை.”

ld4110

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button