ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

மஞ்சள் இஞ்சி மகிமை!

turmeric11-591சமையலில் சுவையுடன் நறுமணத்தையும் அளிப்பதோடு, மருத்துவத் தீர்வையும் அழகையும் அள்ளித் தந்து இன்றியமையாத அங்கமாக சில தாவரங்கள் விளங்குகின்றன. அவற்றோடு கிழக்காசியாவைச் சேர்ந்த ஒரு சிறப்புமிக்க தாவரத்தையும் அறிமுகப்படுத்துகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

பாசுமதி இலை

‘பாசுமதி அரிசி’ என்ற விலைமதிப்புமிக்க அரிசியை அதன் மணத்துக்காகவே புலாவ், பிரியாணி, தேங்காய்ப் பால் சாதம் போன்ற  உணவுகளைச் சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால், கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்குத் தரும் என்றால் வியப்பாக இருக்கும்தானே? தமிழில் பாசுமதி இலை என்றழைக்கப்படும் இது, இன்னும் பிரபலமாகவில்லை. ‘பேன்டன்’ (Pandan) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்தாவரத்தின் குடும்பம் மிகப்பெரியது. Pandanus  amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம்தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டலத் தாவரமான இது, நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

மஞ்சள்

இந்தியாவில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முதன்மை பெற்றது மஞ்சள். பூமிக்குக் கீழ் விளையும் ஆண்டுப் பயிர். சமையலுக்கு விரலி மஞ்சள், மேனி அழகுக்கு கஸ்தூரி மஞ்சள் என இருவேறு வகைகளை நாம் உபயோகிக்கிறோம். காலம் காலமாக பெண்கள் பயன்படுத்திய அழகுசாதனப் பொருளுடன் கூடிய கிருமிநாசினியான கஸ்தூரி மஞ்சள் இன்று தன் மதிப்பை இழந்து மறைந்து வருகிறது. முக அழகுக்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி அழகை இழந்தவர்களும் இழந்து கொண்டிருப்பவர்களும் உண்டு.  பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் இதன் பயன் அறிந்துள்ளனர் என்பதை பின் வரும் பாடல் உறுதி செய்யும்.

புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும்
நன்னுமந் தாக்கினியும் நாசமாம் – வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங்
கத்தூரி மஞ்சளுக்குக் காண் (அகத்தியர் குண பாடம்).

சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்துக்கு
மஞ்சளே நிவாரணம். அதோடு, மேனி
பளபளக்கவும் உடலிலுள்ள சிறுசிறு  உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தலாம். பெண்கள் முகப்பொலிவுக்கு உபயோகிக்கலாம். வீட்டுத்தோட்டத்திலேயே இருவகை மஞ்சளையும் வளர்க்கலாம். கஸ்தூரி மஞ்சளை அப்படியே உலர வைத்து பயன்படுத்தலாம். சமையலுக்கான விரலி மஞ்சளை உபயோகிக்கும் முன் அதனை சாணிப்பாலில் ஊற வைத்துப் பின் வேக வைத்து மதிப்புக் கூட்டுவர்.

இஞ்சி

மிகப் பிரபலமான மருத்துவ குணமிக்க தாவரம்… பூமிக்குக் கீழ் விளையும் இஞ்சி சிறந்த நறுமணப் பொருளும் கூட. இதுவும் ஆண்டுப் பயிரே. இஞ்சியை அதன் தோலை நீக்கி உபயோகிக்க வேண்டும். தோலை நீக்கி, நன்றாக உலர்த்தினால், மிகக் கெட்டியாகும் இஞ்சியே ‘சுக்கு’ என்றழைக்கப்படுகிறது. ‘திரிகடுகம்’ என்னும் கூட்டு மருந்தில் (சுக்கு, மிளகு, திப்பிலி) முதன்மை வகிப்பது  சுக்குதான். காய்ச்சல், இருமல் போன்ற சுகவீனங்கள் ஏற்படும் போது வழங்கப்படும் ‘சுக்குக் காபி’ நல்லதொரு பாட்டி வைத்தியம்.

மதிப்பு கூட்டுவதற்குச் சிறப்பானது. இஞ்சி முறப்பாவும் புகழ் பெற்றது. இஞ்சியை தோல் நீக்கி, பக்குவம் செய்து, சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி முறப்பா தயாரிக்கிறார்கள். இன்றைய குளிர்பானங்களுக்கு முன்பு, அஜீரணக் கோளாறு வந்தால் மக்கள் விரும்பி அருந்தியது ‘ஜிஞ்சர்’ பானத்தைத்தானே? இன்று சிறுநீரக செயலிழப்புக்கு ‘டயாலிஸிஸ்’ எனும் ஆங்கில மருத்துவ முறை பின்பற்றப்படுகிறது. அக்காலத்திலோ, அதிக செலவின்றி முதுகுப் பகுதியில் ‘இஞ்சி ஒத்தடம்‘ தினமும் தர முன்னேற்றம் உண்டு எனப் பதிவு செய்துள்ளனர்.

இஞ்சியில் மற்றொரு வகை மாஇஞ்சி என்றழைக்கப்படும் மாங்காயின் சுவையுடன் கூடிய ஊறுகாய் இஞ்சி. இஞ்சியில் நார்த்தன்மை  அதிகமிருக்கும்; மாஇஞ்சியில் நார்த்தன்மை மிகக்குறைவாகவும் மாவுத்தன்மை அதிகமாகவும் இருக்கும். அதிக நாட்கள் வைத்திருப்பதோ, நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் மதிப்புக் கூட்டுவதோ சற்று கடினம். அதனால், மாஇஞ்சியை ஊறுகாயாக எளிதில் மதிப்புக் கூட்டலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button