ஃபேஷன்

நிறம் என்பது வெறும் நிறமே!

செய்திக்குப் பின்னே… லதா அருணாச்சலம்

இந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி, ‘ரோஸா பார்க்ஸ் தினம்’ உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. ‘பேருந்தில் அமர வெள்ளை இனத்தவர்களுக்கு சமமான உரிமை எனக்கும் உள்ளது’ என்று இருக்கையிலிருந்து எழ மறுத்த அப் பெண்மணியின் திண்மை, பின்னாளில் ஆப்பிரிக்காவில் நிறம் மற்றும் இனப் பிரிவினைகளுக்கு எதிரான பல போராட்டங்களுக்கும் உரிமைக் குரல்களுக்கும் முன்னோடியாக இருந்தது. அதே தினத்தன்று, பெங்களூருவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்…

அன்று சில ஆப்பிரிக்க மாணவர்களால் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரு பெண்மணி உயிரிழந்து விட்டார் என்றும், அதற்காக காவலர்கள் வரும் முன்னே பொதுமக்களால் அந்த ஆப்பிரிக்க மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் செய்தி வந்தது. சம்பவத்தில் சற்றும் சம்பந்தப்படாத ஓர் ஆப்பிரிக்க மாணவி மிக மோசமான முறையில் மிரட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, ஆடைகள் கிழிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அதன் பின்னும் பல காவல் நிலையங்களின் கதவைத் தட்டியும் பாதுகாப்பு கிடைக்காமல் அலைந்திருக்கிறார். அடுத்த நாள்தான் புகார் பதிவு செய்யவே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் செயல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் இன, நிற பிரிவினை வாதம் பற்றிய சகிப்புத்தன்மையை கேள்வி கேட்கிறது. இந்த நிலை ஓர் உள்ளூர் மாணவிக்கு ஏற்பட்டு இருந்தால் மக்களும் காவல்துறையும் இதே போலத்தான் செயல்பட்டிருப்பார்களா? அல்லது இதே குற்றம் ஒரு மேலைநாட்டு வெள்ளை மாணவனால் நிகழ்த்தப் பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்ட மாணவியும் வெள்ளை இனமாக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் மேல் கோபமும் வன்முறையும் அதிகம் நடந்ததா? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இங்கு நான் அனைத்து ஆப்பிரிக்கக்காரர்களையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கறுப்பின மக்களையும் குறிப்பிடுகிறேன். இதைப் பற்றி அவர்கள் வாயிலாகவே நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவிப்பது, கல்லூரியில் அவர்களை நிறத்தின் பெயரால் அழைப்பது, பொது இடங்களில் அவர்களை வெறித்துப் பார்ப்பது அல்லது முற்றிலும் விலகிச் செல்வது, உரிய மரியாதை தராதது, நகரமோ, கிராமமோ எங்கு சென்றாலும் வித்தியாசமாக அவர்களை அணுகுவது… குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் – அவர்கள் மேல் காரணமின்றி பலர் காட்டும் வெறுப்பும் விலகலும் நினைவுபடுத்துவது மறைந்து கொண்டிருக்கும் தீண்டாமைக் கொடுமையைத்தானே?

பெரும்பாலான இந்தியர்களால் குடிகாரர்கள், போதை மருந்துப் பழக்கம் உள்ளவர்கள், ஒழுக்கம் தவறிய பெண்கள், வியாபாரத்தில் நேர்மை இல்லாதவர்கள் நிறைந்த நாடு என்று கிட்டத்தட்ட முத்திரை குத்தப்பட்டுவிட்ட நைஜீரியாவில் நான் 15 வருடங்கள் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறேன். சமூகத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகியதாலும், அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்திருந்ததாலும் அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டவளாகவும் இருப்பதால், இங்கு கறுப்பின மக்களைப் பற்றிய பொதுவான கணிப்பைப் பார்க்கும் போது மனம் மிக வேதனையடைகிறது.

நான் நைஜீரியாவில் தங்கியிருந்த காலத்தில், அங்கிருந்து பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். எங்கு சென்றாலும் சிறப்பான மரியாதையும் பாதுகாப்புமே கிடைத்திருக்கிறது. பெண்களை அவர்கள் போற்றுவார்கள். எந்த நிலையிலும் பெண்களையும் குழந்தைகளையும் வயதானவர்களையும் கை தொட மாட்டார்கள். இளம் பெண்கள், இந்தியப் பெண்கள் உள்பட யாராக இருந்தாலும், நாளின் எந்த நேரத்தில் வெளியே சென்றாலும் பயம் இல்லை. பாலியல் வன்முறையும் ஆடைகளால் ஒரு மனிதரை எடை போடுவதும் வெறித்துப் பார்ப்பதும் அறவே இல்லை.

மற்ற நாட்டினரை – குறிப்பாக இந்தியர்களை மிகவும் அன்போடும் மரியாதையோடும் நடத்துவார்கள். நம்மிடம் பணிபுரிபவர்கள் கூடப் பாசமாக குடும்பத்தில் ஒருவராகவே பழகுவார்கள். எந்த நாட்டிலும், எப்போதுமே சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வரையறுக்கப்பட்ட சட்டம் – ஒழுங்கை மதிக்காமல் வாழ்கிறார்கள். ஆனால், அதையே ஓர் இனத்தின் அடையாளம் என உறுதியாக நம்புவதே பலரது மனநிலையாக இருக்கிறது. நம் நாட்டை, ‘பாம்பாட்டி தேசம்’ என்றும், ‘பிச்சைக்காரர்களும் சேரிகளும் மட்டுமே நிறைந்த நாடு’ என்றும் மற்றவர்கள் கணித்து வைத்திருப்பதைப் பார்த்தால், எத்தனை கோபமும் ஆற்றாமையும் வருகிறது? அதே நிலைதான் இது.

இந்தியாவின் மருத்துவத் துறை, கல்வித் துறை பற்றி அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் உயர்வான எண்ணம் உள்ளது. நைஜீரியாவில் எங்கள் நிறுவனத்தில் பயிற்சியளிக்க வந்த பெண்மணி, இந்தியாவின் வடமாநிலத்தில் ஒரு கிராமத்தில் சர்வே எடுக்கச் சென்ற போது தன்னை சிலர் கல்லால் அடித்தனர் என்று என்னிடம் சொன்ன போது அப்படியே என் மனம் கூனிக் குறுகி விட்டது.

இன்று இந்த மாணவி மற்றும் அது போன்ற பலர் மீடியாவிலும் சமூக வலைத்தளத்திலும் நம் நாட்டின் மத, இனச் சார்பற்ற தன்மையை கேள்வி கேட்கும் போது அன்றடைந்த அதே மனநிலையை அடைகிறேன். மேற்கூறிய அத்தனை காரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, ஒரு வெளிநாட்டு மாணவி, நிற பேதத்தினாலேயே கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள் என்று தெரியவரும் போது அது இவ்வளவு நாட்கள் நாம் போற்றும் குணங்களில் ஒன்றான, ‘விருந்தினர் தெய்வத்துக்கு ஒப்பானவர்’ என்பது வெறும் வாய்ப்பேச்சுதானோ என்று ஐயம் கொள்ள வைக்கிறது.

இப்படி நாம் அடுத்த நாட்டு மாணவர்களையும் மாணவிகளையும் பாதுகாக்காமல், அவர்களை மோசமாக நடத்தும் போது வெளிநாட்டில் தங்கிப் படிக்கும் நமது நாட்டு மாணவர்கள் பற்றிய நினைவு வருவதில்லையா? கலிஃபோர்னியாவிலோ,
ஆஸ்திரேலியாவிலோ நம் நாட்டு மாணவர்கள் நிறப்பாகுபாட்டால் மோசமாக நடத்தப்பட்ட போது பொங்கி எழுந்த நாம், இப்போது மௌனமாக இருக்கிறோம்.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் இப்படித்தான் என்று அவர்களை பற்றிய முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்து பலரை யோசிக்க விடுவதே இல்லை. இனிமேலாவது யோசிப்போம். நிறமும் தோற்றமும் வேறாக இருப்பதால் விசித்திரமானவர்கள் அல்ல… அவர்களும் மனிதர்களே… நல்ல குணம் படைத்தவர்களே… இதை நாம் உணர வேண்டும். மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும். அவர்கள் நாட்டு கலாசாரத்துக்கேற்ப சில பழக்க வழக்கங்கள் மாறுபட்டிருக்கலாம்.

அதற்காக அவர்களை எள்ளல் செய்யாமல் மனதார ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மண்டேலாவும், மார்ட்டின் லூதர் கிங்கும், ரோஸா பார்க்ஸூம் போற்றிப் புகழ்பாடும் காந்தியடிகள் தோன்றிய நாட்டில் நாம் இருக்கிறோம். அவர் போராடியது தனக்காக மட்டுமல்ல… ஆப்பிரிக்கர்களின் உரிமைக்காகவும்தானே?

இந்த வரலாறு அறிந்த நாம் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி காட்டுவது ஏன்? சாதி, இனம், மதம், மொழி என்று பல வேற்றுமைகளிலும் ஒற்றுமையாக வாழ்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் சமுதாயம் இன்று நிறப் பாகுபாட்டால் ஓர் அயல் நாட்டு மாணவியை மட்டுமல்ல… இங்கு வந்து கல்வி கற்க வேண்டும் என நினைக்கும் பல ஆப்பிரிக்க நாட்டு மாணவிகளின் கனவையும் உரிமையையும் கூடக் கேள்விக்குறியாக்கி விட்டது. இந்த நிலையை இனிமேலாவது மாற்றுவோம்.
ld4145

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button