ஆரோக்கிய உணவு

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன்களா..?!!

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மற்றொருபுறம், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், மாம்பழத்தின் மீதான ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

‘பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தரக்கூடிய சுவையான மாம்பழத்தை, பயத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளக் கூடாது’ என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் சசிகலா. மாம்பழத்தின் சிறப்புகள், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து மேலும் அவர் கூறுகையில்.

‘மாம்பழம் மற்றும் அதன் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அதைப் பலரும் குறை சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுகிறோம். குறை சொல்லும் அளவுக்கு அதில் ஒன்றுமே இல்லை என்பதே யதார்த்தம். மனிதனுக்கு எந்தெந்தக் காலங்களில் என்ன தேவை என்பதை இயற்கை நன்றாக அறிந்துவைத்துள்ளது. நம் ஆரோக்கியத்துக்காக இந்தக் கோடை காலத்தில் இயற்கை தந்த அற்புதப் பரிசுதான் மாம்பழம்.

வைட்டமின் சி, ஏ மிக அதிகமாக உள்ளது. வைட்டமின் சி மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியம். வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் ஏற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். கோடைக் காலத்தில்தான் கண் நோய்கள் வரும், அதேபோல உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும். இதைத் தடுக்க இயற்கையே, மாம்பழத்தை நமக்கு அளித்து நம் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. மேலும், இதிலுள்ள மற்ற சத்துக்கள் தோலுக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். வெயில் காலத்தில் இது மிகவும் தேவை.

மாம்பழத்தை அதிகமாக உண்ணும் போது அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆண்கள் இதை அளவாக உண்ணும்போது ஆண்மை பெருக்கியாக செயல்படும். மாம்பழம் மனத் தளர்ச்சியை நீக்கும். சிறந்த சிறுநீர்ப்பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மாம்பழம் செயல்படுகிறது.

மாம்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்களும் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் மாங்காயைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மாம்பழத்தின் தன்மையே வெப்பம். அந்த வெப்பம் உடலுக்கு தேவையானதும்கூட. எனவே இது சூடு என ஒரேடியாக ஒதுக்கித்தள்ளுவதும் தவறு. மாங்காயை அதிகம் உப்பு காரம் சேர்த்துச் சாப்பிடும்போது தோலில் வெடிப்பு, சிரங்கு போன்றவை ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உடனே, மாங்காய் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

கற்கள் வைத்துப் பழுக்கவைக்கும் மாம்பழங்களையும் மிக எளிதாகக் கண்டறியலாம். இயற்கையாகப் பழுத்த பழங்களில் தோல் சற்று சுருங்கி கொழகொழவென இருக்கும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டது நன்கு பளபளப்பாக மின்னும். கடினமாகவும் இருக்கும். எனவே, பார்த்து வாங்குவது நல்லது. செயற்கையான பழங்களைச் சிறிதளவு சாப்பிட்டாலே பேதி, மார்பு எரிச்சல் போன்ற பாதிப்புகள் உடனடியாகத் தெரியவரும். அதன் மூலம் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.’

எல்லாமே இருக்கு.

மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் என அனைத்தும் நிறைவாக உள்ளன. குடல், மார்பகம், புராஸ்டேட், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளிட்டவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
mango

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button