சரும பராமரிப்பு

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்!!!

நாம் தினமும் தான் குளிக்கிறோம், காலை, மாலை வேளைகளில் முகம் கழுவுகிறோம். அப்பறம் என்ன தனியாக உடலில் நீங்கள் சுத்தம் செய்ய வேண்டிய பாகங்கள் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? குளிக்கிறீர்கள் சரி, ஆனால், சரியான முறையல் குளிக்கிறீர்களா? அது தான் கேள்வியே.

நம்மில் பலர், காக்கா குளியல் தான் குளிக்கிறோம். குளியல் அறைக்குள் செல்வார்கள் மொண்டு, மொண்டு தண்ணியை கீழே ஊற்றுவார்கள், சோப்புக் கட்டியை எடுத்து மேலும், கீழும் நாலு தேய்,தேய்த்தப் பிறகு மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிவிட்டு வந்துவிடுவார்கள்.

உங்கள் உடலில் நீங்கள் கட்டாயம் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன, அங்கு தான் நமது ஆட்கள் சரியாக தேய்த்து குளிக்க மாட்டார்கள். சிலருக்கு, சோம்பேறித்தனம், சிலருக்கு அவர்களது உடல் பாகங்களை தொட்டு, தேய்த்து கழுவுவதற்கு சங்கோஜம்.

இனி, தினமும் உங்கள் உடலில் நீங்கள் சுத்தம் செய்ய மறக்கக் கூடாத பாகங்கள் பற்றிப் பார்க்கலாம்…..

காது

குளிக்கும் போது முகம் கழுவுவோம், ஆனால், நிறைய பேர் காதுகளை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். இதன் காரணமாக தான் சிலருக்கு காதுகளுக்கு அருகில் கருப்பு பிடித்தது போல், கரு கரு வென்று காதுகளின் கீழ் பாகங்கள் இருக்கும். மற்றும் இதனால் சரும தொற்றுகள் ஏற்படலாம்.

தொப்புள்

நம்ம சின்ன கவுண்டர் பம்பரம் விட்டு விளையாடிய இடம். 99% பேர் அவர்களது தொப்புள் பகுதியை கழுவுவதே கிடையாது என்பது தான் உண்மை. தொப்பையை சுற்றி சோப்பை சுற்றோ, சுற்றென்று சுத்துவோம், ஆனால் தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய மாட்டோம். உங்கள் தொப்புள் பகுதியில் மட்டுமே 2,368 வகையான பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்பறம் உங்க வசதி.

பல் துலக்குவது

பற்பசையை சில பேர் பல் துலக்குகிறேன் என்று காலையில் சாப்பிட்டுவிடுவார்கள். கேட்டால் பல் துலக்கினேன் என்பார்கள். இடதுபுறமும், வலதுபுறமும், மேலே கீழே, நான்கு முறை பிரஷை விட்டு ஆட்டிவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் தான் பற்கள் மஞ்சள் நிறமாகின்றன. எனவே,சரியான முறையில், பற்களை மென்மையாக தேய்த்து துலக்க வேண்டியது அவசியம்.

நடுமுதுகு

நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தேய்த்து குளிக்க முடியாத இடம் என்றால் அது, நடுமுதுகு தான். அதற்கென்று என்ன செய்ய முடியும், திருமணம் ஆனவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் அதற்கெனவே சந்தையில் விற்கும் பிரஷை வாங்கி நன்கு தேய்த்துக் குளியிங்கள்.

விரல் நக இடுக்குகள்

சிலர் நகத்தை வெட்டுவதற்கே நால்வர் கூற வேண்டும். இந்த லட்சணத்தில் எங்கு நக இடுக்குகளில் அழுக்கு போக கழுவுவது. இது தான் மிக முக்கியம். கை விரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்கு, நீங்கள் சாப்பிடும் போது உடலுக்குள் போகும். இதனால் உங்கள் வயிற்றில் நிறைய பாக்டீரியாக்கள் சேருகின்றன.

பிறப்புறுப்பு பகுதி

சங்கோஜப்படும் ஆன்மாக்கள் செய்யும் தவறு, பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தம் செய்யாமல் இருப்பது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, அவர்களது பிறப்புறுப்புப் பகுதிகளை நன்கு கழுவ வேண்டியது அவசியம். இல்லையேல் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. முக்கியமாக பெண்கள்.

தொடை இடுக்குகளில்

தொடையின் இடுக்குகளில் தான் ஓர் நாளில் நிறைய வியர்வையின் காரணமாக அழுக்கு சேருகிறது. எனவே, அவ்விடங்களில் நன்கு தேய்த்து கழுவ வேண்டியது அவசியம். குளித்தப் பிறகு அந்த இடத்தில் உடல் துடைக்கும் டவலைக் கொண்டு ஈரம் போகும் வரை நன்கு துடைக்க வேண்டும்.

14 1431602420 7bodypartsthatwedontclean

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button