மருத்துவ குறிப்பு

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!

எதிர்மறை எண்ணங்கள், ஓர் மனிதனின் சாதனைகளை முளையிலேயே கிள்ளி எறியும் கருவி. இது உங்கள் வெற்றியை மெல்ல மெல்ல அரித்தெடுக்கும் கரையான். கரடுமுரடான பாதைகள் இல்லையெனில் அது மலையாகாது, தோல்விகள் இல்லாத மனித வாழ்க்கை முழுமையடையாது.

ஓர் தோல்வி புகட்டும் பாடத்தினை, எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், அறிஞராக இருந்தாலும் கூட கற்பிக்க முடியாது. தோல்வி வெற்றிக்கான முதல் குரு. அதனால், தோல்வியும், சங்கடங்களும் வந்து போகும் போது எதிர்மறை எண்ணங்களில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

எதிர்மறை எண்ணங்களை எதிர்த்து நின்றாலே நீங்கள் வெற்றிக்கான பாதையில் காலடி எடுத்து வைத்துவிடலாம். எனவே, எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எப்படி மேன்மையடைவது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்….

புலம்புவது

பெரும்பாலானோர் தங்கள் தோல்வியை கண்டு புலம்புவதை விட, மற்றவருடைய வெற்றியைக் கண்டு தான் புலம்புகிறார்கள். என்னால் இது இனி முடியாது என்ற எண்ணத்தை கைவிட்டு, நான் இனி இதை பயின்று அடுத்த முறை நிச்சயம் வெற்றியடைவேன் என்று எண்ணுவது தான் உத்தமம்.

கற்கும் திறன்

தினமும் கற்றுக்கொண்டே இருங்கள்.மரணம் என்பது கடைசி மூச்சில் இல்லை. எவன் ஒருவன், ஓர்நாளில் தான் கற்பதை நிறுத்துகிறானோ, அந்நாளே அவன் இறந்துவிடுகிறான் என்பது சான்றோர் வாக்கு. எனவே, தினமும் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டே இருங்கள். இது, உங்களை ஊக்குவிக்கும் கருவி என்பதை மறந்துவிட வேண்டாம்.

முயற்சி

திருவினையாக்கும் முயற்சிகள் இல்லாவிடில், நீங்கள் காலைக்கடனை கூட சரியாக கழிக்க முடியாது. முயற்சி தான் மனிதனின் மூச்சு, அதை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதீர்கள்.

மனதை ஒருநிலைப்படுத்துதல்

ஓர் எண்ணத்தில் குறியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல வழிகளில் செல்லவும், பல வேலைகளை செய்யவும் முயற்சிக்க வேண்டாம். உங்கள் மனதை ஓர் பாதையில் பயணிக்க ஒருநிலைப்படுத்த பழகுங்கள்.

சுய பரிசோதனை

உங்களை நீங்களே சோதனை செய்ய வேண்டும். நீங்கள் எந்த பகுதிகளில் வல்லமை கொண்டுள்ளீர்கள், எந்த பகுதிகளில் வலிமை குன்றி இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

ஒப்புக்கொள்ளும்

மனப்பான்மை நீங்கள் நல்லது செய்தாலும், தவறுகள் செய்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை தேவை. இது, உங்களை உயர்வடைய உதவும்.

பொறாமை வேண்டாம்

பொறாமை குணம், உங்கள் வெற்றி பாதையின் தடைகளாக அமையும். இது, உங்களின் ஒருமுகப்படுத்திய நிலையினை உடைத்துவிடும். எனவே, மற்றவர் மீது பொறாமைப்பட்டு, உங்கள் வெற்றியை நீங்களே தொலைத்துவிட வேண்டாம்.

சில பயிற்சிகள்

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர, தினமும் யோகா செய்யலாம், இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்த உதவும், உங்களுக்கு பிடித்த மென்மையான பாடல்கள் கேட்கலாம், நடைபயிற்சி மேற்கொள்ளலாம், மற்றும் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலைகளில் அல்லது நபருடன் நேரம் செலவிடலாம்.

செய்ய கூடாதவை

எனக்கு வராது, நான் ஓர் முட்டாள், வெற்றியடைய மாட்டேன் என்று எதிர்மறை வார்த்தைகளை கூட பிரயோகிக்க கூடாது. இது, உங்கள் எதிர்மறை எண்ணங்களை அதிகப்படுத்திவிடும்.

திட்டமிட்டு செயல்பட துவங்குங்கள்

எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் உடனடியாக முடிப்பதைவிட, உறுதியாக முடிப்பது தான் சிறந்த பலன் தரும்.

16 1434449913 9howtostopnegativethoughtsfromgettingyoudown

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button